எங்கள் தங்கம் சிந்து!

ஒலிம்பிக்

ரியோ ஒலிம்பிக்கில் நம் தேசத்துக்கு சந்தோஷமும் பெருமையும் நெகிழ்ச்சியும் தந்த சல்யூட் பெண்களின் சாதனைச் சிதறல்கள் இங்கே!

சாதித்துக் காட்டிய சிந்து!


பேட்மின்டன் ஃபைனலுக்குத் தகுதி பெற்றதன் மூலம் தனிநபர் விளையாட்டுப் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்தியப் பெண் எனும் சாதனையைப் படைத்தார் சிந்து. அவர் வாங்கிய வெள்ளிப்பதக்கம் ஒலிம்பிக் போட்டியில் இந்தியப் பெண்ணொருவர் வாங்கும் ஐந்தாம் பதக்கம். வெள்ளிப்பதக்கம் பெறும் முதல் இந்தியப் பெண். மிக இளம் வயதில் பதக்கம் பெறும் முதல் இந்தியப் பெண்.

தனது 8 வயது முதல் பேட்மின்டன் பயிற்சி மேற்கொண்டுவரும் சிந்துவுக்கு இதுதான் முதல் ஒலிம்பிக். குரூப் சுற்று எளிதாக இருந்தாலும், காலிறுதியில் சிந்து எதிர்கொண்டதோ உலகின் இரண்டாம் நிலை வீராங்கனை. அங்கே உலகத்தின் கவனத்தை ஈர்த்து வென்று `வாவ்' சொல்ல வைத்தார். அரையிறுதிப் போட்டியில் தனது ‘கிராஸ் கோர்ட்’ ஷாட்கள் மூலம் எதிராளியை அலக்கடித்து எளிதில் புள்ளிகள் வென்றார். ‘சிந்துவின் பலம், எதற்குமே எப்போதுமே மனம் தளராததுதான்’ என்று சொல்லும் அவரது பயிற்சியாளர் கோபிசந்த், சிந்துவின் இந்த வெற்றிக்கு முக்கியக் காரணம்.

இந்தத் தொடரில் சிந்து தோற்கடித்த பலரும், முக்கியத் தொடர்களில் சிந்துவை பல முறை வென்றவர்கள். ஆனால், சிந்து தனது பெர்ஃபார்மன்ஸில் மாற்றம் கொண்டுவரவில்லை. தனது தவறுகளிலிருந்து பல பாடங்கள் கற்றார். எதிராளிகள் தன்னை எப்படி வீழ்த்தினார்கள் என்பதை அலசி ஆராய்ந்த சிந்து, ஒவ்வொருவரையும் எப்படி எதிர்கொள்ள வேண்டுமென்று தீர்மானித்தார். பலமுறை தாங்கள் வென்ற ஒரு 21 வயது பெண்ணிடம் சரண்டர் ஆனபோது, உலகின் தலைசிறந்த வீராங்கனைகளெல்லாம் சற்று கண்கலங்கியே போயினர். அதுதான் சிந்து!

இந்தியர் மனதில் தங்கிய மகள்!


ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லவில்லை. ஆனால், கோடிக்கணக்கான மக்களின் விலைமதிப்பில்லாத அன்பை ஓரிரவில் தனதாக்கி வானளவு உயர்ந்து நிற்கிறார், திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது தீபா கர்மாகர். ஜிம்னாஸ்டிக் விளையாட்டின் மிகக்கடினமான புரோடுனோவா பிரிவைத் தேர்ந்தெடுத்து ஒலிம்பிக்கில் 4ம் இடம் பெற்ற தீபா, இன்று இந்தியாவின் முகம்.

ஆறு வயது முதல் ஜிம்னாஸ்டிக் பயிற்சி பெற்றுவரும் தீபா, அதில் அதிக புள்ளிகளைத் தரக்கூடிய, ஆனால் உயிருக்கே ஆபத்தான ‘புரோடுனோவா’ என்னும் பிரிவைத் தேர்ந்தெடுத்தார். உயிரைப் பணயம் வைத்து பயிற்சி மேற்கொண்டார்.

தீபாவோடு சேர்த்து உலகிலேயே இதுவரை 5 பேர் மட்டுமே ‘புரோடுனோ வாவை’ வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர். காரணம், உயிருக்கு ஆபத்தான விளையாட்டு என்பதுதான். ஆனால், தீபா உயிர்மேலான பயத்தையும் பாரத்தையும் வீசிவிட்டு நம்பிக்கையோடு பாய்ந்தார், வளைந்தார், குட்டிக்கரணம் அடித்தார். இதோ இப்போது நம் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்