அநாதைகளின் அன்னை!

சேவை

`சிந்துதாய் சப்கல்... மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று அநாதைகளின் அன்னை’ என போற்றப்படும் ஒரு பெண்மணி.  நேற்றோ... கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல் கணவனால் கைவிடப்பட்டு, `ஒழுக்கம் கெட்டவள்' என்று ஊர் மக்களால் ஒதுக்கிவைக்கப்பட்டு, பச்சிளம் குழந்தையுடன் ரயில்வே பிளாட்பாரத்தில் பிச்சையெடுத்து வாழ்ந்தவர். இந்த சிந்துதாயின் கண்ணீர்க் கதை... உருக்கம்; அதற்குப் பிறகான அவரின் எழுச்சி... ஆச்சர்யம்!

‘‘மகாராஷ்டிர குக்கிராமம் ஒன்றில் ஏழைக் கூலி விவசாயிக்கு மகளாகப் பிறந்தேன். நான்காம் வகுப்போடு பள்ளிப்படிப்பு முடிந்துபோனது. 10 வயதில் திருமணம். என் கணவருக்கோ வயது 30. என் 20 வயதில் நான் கர்ப்பிணியாக இருந்தபோது, பெரும் பணக்காரர் ஒருவருக்கு எதிராக ஊர் மக்களைத் திரட்டி போராட்டம் ஒன்றை நடத்தி மக்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்தேன். அவமானமும் கோபமும் அடைந்த அந்தப் பெரும்புள்ளி, ‘சிந்துதாய் கர்ப்பத்துக்கு நான்தான் காரணம்’ என்று என் மீது அவதூறு கூறினார். பணம் பேசியது. ஊரிலிருந்து என்னை விலக்கிவைத்தனர். என் கணவரும் என்னைக் கைவிட்டார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த எனக்கு என் தாய்கூட அடைக்கலம் கொடுக்கவில்லை. ‘ரயில் தண்டவாளத்தில் படுத்து உயிரைவிடு’ என்றார்’’ எனும் சிந்துதாய், ஆதரவற்ற நிலையில் மாட்டுத் தொழுவத்தில் பெண் குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறார்.

‘‘அதன் பின் ரயில் நிலையத்தில் என் குழந்தை யுடன் பிச்சையெடுத்து உயிர் வாழ்ந்தேன். அப்போதுதான், அங்கு பல அநாதைக் குழந்தைகள் தங்கள் பசியைப் போக்குவதற்காக கையேந்தித் திரிவதைக் கண்டேன். அவர்கள் அனைவரையும் என் குழந்தைகளாகவே அரவணைத்துக்கொண்டேன். நான், என் மகள் என இரண்டு வயிறுகளுக்கு மட்டும் யாசிக்காமல், இன்னும் அதிமாக கையேந்தி, வந்ததை அனைவருக்கும் பகிர்ந்தளித்தேன். சமூக விரோதிகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ள  அவர்கள் அனைவருடனும் ரயில் நிலையத்தில் இருந்து கோயிலில் குடிபெயர்ந்தேன்’’ என்று சொல்லும் சிந்துதாய், தொடர்ந்து, அநாதை என்ற அடையாளத்துடன் தன்னிடம் வந்து சேர்ந்த அனைவருக்கும் அன்னையாகி ஆதர வளிக்கத் தொடங்கியிருக்கிறார்.  

ஆதரவற்றவர்களுக்கு ஆலமரமான சிந்துதாய், காலப்போக்கில் நல்ல உள்ளங்களின் உதவியுடன் அதை ஓர் அமைப்பாகவும் மாற்றினார். தன் மகளுக்கும் மற்ற குழந்தைகளுக்கும் இடையில் பாரபட்சம் இருக்கக்கூடாது என்று நினைத்தவர், மகளை புனேவை சேர்ந்த ஒருவருக்கு தத்துக்கொடுத்தார். தன்னிடம் தஞ்சமடைந்த குழந்தைகளை தாயாகி வளர்த்தார். அவரால் ஆளாக்கப்பட்ட பலர் இன்று மருத்துவர், பொறியியல் மற்றும் கணிப்பொறி வல்லுநர்கள், பேராசிரியர், வழக்கறிஞர் என வாழ்க்கையில் உயர்ந்துள்ளனர். சிந்துதாயின் மகள் மற்றும் அவரிடம் வளர்ந்தவர்களில் பலரும், மகா ராஷ்டிராவில் பல அநாதை இல்லங்களை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

‘‘என் குடும்பம் மிகப்பெரியது. இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட அநாதைக் குழந்தைகளை அரவணைத்து வளர்த்து ஆளாக்கியுள்ளேன். என்னை கைவிட்ட என் கணவர் தன் 80-வது வயதில் என்னிடம் வந்து மன்னிப்புக் கோரினார். அவருக்கும் அடைக்கலம் கொடுத்தேன். ‘இவர் என் மூத்த குழந்தை’ என்றுதான் அவரை அனைவரிடமும் அறிமுகப்படுத்துகிறேன்’’ என்கிறார் அன்பே வடிவான இந்தத் தாய்.

தனது சேவைக்கென இதுவரை 270-க்கும் அதிகமான விருதுகளைப் பெற்றுள்ள சிந்துதாய், அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு ஆதரவற்றவர்களுக்கான வசிப்பிடம் கட்டிவருகிறார். ஆனாலும் பணம் போதவில்லை. எனவே, எந்த ஊருக்குச் சென்றாலும் பொதுமக்கள் கூடும் இடங்களில் துண்டை விரித்து, ‘என் குழந்தைகளைக் காப்பாற்ற உதவுங்கள்’ என கையேந்துகிறார்.

68 வயதாகும் சிந்துதாய்க்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்து சிறப்பித்துள்ளது மகாராஷ்டிர பல்கலைக்கழகம் ஒன்று! இவரது வாழ்க்கை, ‘நான் சிந்துதாய் சப்கல்’ என்ற தலைப்பில் மராட்டிய மொழியில் திரைப் படமாக வெளிவந்து, 54-வது லண்டன் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

‘‘யாரும் இல்லாதவர்களுக்கு நான் இருக்கிறேன்’’ என்று தன் பயணத்தைத் தொடர்கிறார் சிந்துதாய்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்