பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..?

குழந்தை வளர்ப்பு

பல வீடுகளிலும் நாம் காணும் காட்சி. ஆண் குழந்தைகள் வீட்டையே அதகளப்படுத்திக் கொண்டிருக்க, பெண் குழந்தைகள் தன் பொம்மைக்கு அம்மாவாக, செப்பு சாமானில் சோறு, குழம்பு சமைப்பவர்களாக என பெண்களாகவே வளர்வார்கள்.

இது இயற்கையா? ஆண், பெண் வித்தியாசங்கள் அழிந்துவரும் உலகில் இந்த இயல்பில் மாற்றம் கொண்டுவர வேண்டுமா? இதில் பெற்றோர்களின் பங்கு என்ன?

மதுரையைச் சேர்ந்த குழந்தைகள் மனநல ஆலோசகர், ‘டாப்கிட்ஸ்’ குழந்தைகள் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை மையத்தின் இயக்குநர், டாக்டர் தீப், விளக்கமும், நடைமுறையில் தேவைப்படும் திருத்தங்களும் சொல்கிறார்.

‘‘உணவு வேட்டை, பலம் நிரூபிப்பது, தன் குடும்பத்துக்கு பாதுகாப்பு கொடுப்பது போன்றவை, ஆணின் பொறுப்புகள். குழந்தைகள் பெற்றுக்கொள்வது, அவர்களை வளர்ப்பது, குடும்பத்தை நிர்வகிப்பது போன்றவை, பெண்ணின் பொறுப்புகள். இந்தப் பொறுப்புகளின் அடிப்படையில்தான் அவர்களின் இயல்புகளை நிர்மாணித்துள்ளது இயற்கை.

எனவே, ஆணுக்கு தன் பொறுப்புகளின் பொருட்டு பலத்தை நிரூபிப்பது பிரதான குணமாகவும், பெண்ணுக்கு தன் பொறுப்புகளின் பொருட்டு மென்மையாக  இருக்க வேண்டியது பிரதான குணமாகவும்... இருவர்களின் மரபணுக்களிலும் கட்டமைக்கப் பட்டுள்ளது.

‘ஆனால், எங்கள் பையன் மிக அமைதியாக, மென்மையாக இருக்கிறான்’ என்றும், ‘என் பெண், இரண்டு பையன்கள் சேர்ந்து செய்யும் சேட்டையைச் செய்கிறாளே’ என்றும் சில பெற்றோர்கள் வியந்து கேட்கலாம். ஆணுக்குள் இருக்கும் பெண்மையும், பெண்ணுக்குள் இருக்கும் ஆண்மையும் சிலருக்கு தத்தம் இயல்பை மீறி சற்று அதிகமாக வெளிப்படும். ‘டாம்பாய்’, ‘டாம்கேர்ள்’ என்போம். இது குழந்தைப் பருவத்திலும் நிகழும். அதனால்தான், சில ஆண் குழந்தைகள் ஆச்சர்யப்படும் விதத்தில் அமைதியாகவும், சில பெண் குழந்தைகள் அளவுக்கதிகமான சுட்டித்தனத்துடனும் இருப்பார்கள். இதுவும் இயல்புதான். முரண் அழகு.

‘நாம் கடக்கக் காத்திருக்கும் காலத்தில் ஆணுக்கு இணையாகப் பெண் அனைத்துத் தளங்களிலும் தன்னை வெளிப்படுத்த, போட்டியிட, நிரூபிக்க வேண்டியுள்ளது. எனில், பெண் குழந்தைகளை இன்னும் தைரியமாக, வலிமையாக, ஆண்களுக்கு இணையாக வளர்க்க வேண்டியது அவசியமில்லையா?’ என்று சில தாய்மார்கள் கேட்கலாம்.

ஆணுக்கு பலமும் பெண்ணுக்கு மென்மையும் இயல்பு குணங்களாக வெளிப்பட்டாலும், மனதளவில் பெண்ணே ஆணைவிட மிக வலிமையானவள். குஞ்சு பொரித்த கோழியில் இருந்து, குட்டி போட்ட சிங்கம்வரை, மகவு ஈன்ற சமயத்தில் அவற்றிடம் வெளிப்படும் பலம் இயல்பைவிடப் பன்மடங்காகப் பெருகியிருக்கும்; எதிர்ப்பது தன் இனத்தின் ஆணாக இருந்தாலும், மோதி வெல்லும்.

மனிதர்களும் விலங்கு ஜாதியே. ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் உறங்கிக்கொண்டுதான் இருக்கிறது அந்த வலிமை. அதற்கான சந்தர்ப்பம் வரும்போது அதை அவள் வியக்கத்தக்க விதத்தில் வெளிப்படுத்துவாள். ‘ஆனால், அதன் அவசியத்தை நாம்தானே கற்றுத்தந்து வளர்க்க வேண்டும் என்கிறீர்களா?!

நிச்சயமாக. அதை சரியாக, நுட்பமாகச் செய்ய வேண்டும். என்னவெனில், ‘ஆண்கள் சாதிக்கும் அனைத்தையும் உன்னால் சாதிக்க முடியும்; ஆனால், அதற்காக நீ ஆண்போல நடந்துகொள்ள வேண்டியதில்லை. உன்னுள் இருக்கும் உன்னை இன்னும் சிறப்பாக வெளிப்படுத்தும் கேரக்டர் டெவலப்மென்ட்டை கைகொள்ள வேண்டும்; ஜீன்ஸ் அணிவது, பைக் ஓட்டுவது என்று ஆண்களின் பழக்கவழக்கங்களைப் பின்பற்றும் பிஹேவியர் காப்பி தேவையில்லை. ‘ஆண்போல’ என்பது சிறுமையே! பெண், பெண்ணாக இருந்து வெல்வதே பெருமை’ என்று, அவள் வலிமையை அவளை உணரச்செய்வதாக இருக்க வேண்டும் அந்த வளர்ப்பு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்