நமக்குள்ளே!

`எந்த மாதிரியான சமூகத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்?’ என்பதை மீண்டும் மீண்டும் பேச வைக்கின்றன சமீபத்திய நிகழ்வுகள். சுவாதியின் மரணம் நிகழ்த்திய அச்சம் மனதிலிருந்து மறையும் முன்பே, அடுத்தடுத்து அரங்கேறிக்கொண்டிருக்கின்றன பெண்களுக்கு எதிரான அறமற்ற செயல்கள்.

ஒருதலைக் காதலை ஏற்கவில்லை என்பதற்காக சக மாணவர்கள் முன்னிலையிலேயே துடிதுடிக்க அடித்துக் கொல்லப்பட்ட கரூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி சோனாலி, கொடூரமாய் வெட்டிக் கொல்லப்பட்ட தூத்துக்குடி பள்ளி ஆசிரியை பிரான்சினா, கத்தியால் குத்தப்பட்ட திருச்சி மாணவி மோனிகா, புதுச்சேரியை சேர்ந்த ரோஸ்லின் அன்னாள் என தொடர்கின்றன கொடூரத் தாக்குதல்கள்.

பெண்களைப் பலியாக்கும் அர்த்தமற்ற செயலுக்கு `காதல்’ என்று பெயர் வைக்காதீர்கள் என சமீபத்தில்தான் நமக்குள்ளே பகுதியில் பேசி இருந்தோம். ஆனால், என்ன பேசி என்ன பயன்? இந்தச் சமூகத்தின் வடுவாகிக் கிடக்கும் வன்கொடுமைகளைத் தடுப்பதுதான் எப்படி?

ஒருபுறம் கொலைகள் அரங்கேறுகின்றன என்றால், இன்னொருபுறம் கண்ணெதிரே நிகழும் இதுபோன்ற சம்பவங்களைத் தட்டிக் கேட்கும் மனத்துணிச்சலும் மனிதாபிமானமும் அற்றுப் போய்க்கொண்டிருப்பது வேதனைக்குரிய விஷயமே. கொலைகள் செய்யும் துணிவும் குரூர மனப்பான்மையும் உருவாகிக்கொண்டிருக்கும் சூழலில்தான், ‘தனக்கு என்ன வந்தது’ என ஒதுங்கிக்கொள்ளும் தலைமுறைகளும் பிரதியெடுத்தது போல் பல்கிப் பெருகி, உருவாகிக்கொண்டிருக்கின்றன.

விதிவிலக்காக, குற்றச்சம்பவங்கள் நடக்கும்போது உதவ முன்வருவோரை, அவர் இயல்பு வாழ்வை வாழவே இயலாத அளவுக்குப் புறந்தள்ளி வைக்கின்றன இந்தத் தேசத்தின் சட்டமும் சமூகமும். யாராவது அடிபட்டு சாலையில் கிடந்தால்கூட, `யார் போலீஸ், கேஸுனு அலையறது’ என்ற சுயபாதுகாப்புக்கு முக்கியம் கொடுத்துவிட்டு, இரக்கத்தையும் மனிதாபிமானத்தையும் உள்ளே புதைத்துக்கொள்கிறோம்.

குற்றச்செயல்கள் எப்படி அடிப்படையில், குடும்பங்களில் இருந்து மாற்றப்பட வேண்டுமோ, அதேபோலவே சுயநலமற்ற பொதுநலச் சேவையை செய்யத் துணியும் தலைமுறைகளை உருவாக்க வேண்டியதும் ஒவ்வொரு குடும்பத்தின் பொறுப்பல்லவா தோழிகளே!

மாற்றம் என்பது யாரோ ஒருவரிடம் அல்ல, அது நம்மிடம் இருந்தேதான் துவங்க வேண்டும்.

உரிமையுடன்,

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்