சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
தீராத காய்ச்சலையும் தீர்த்துவைக்கும் காச்சக்காரி அம்மன்!

ருமாரி, கோட்டைமாரி, சக்திமாரி, முத்துமாரி, எல்லைமாரி என்று வெவ்வேறு பெயர்களுடன் வெவ்வேறு தலங்களில் கோயில்கொண்டு, ஊரையும் ஊர்மக்களை யும் காக்கும் காவல் தெய்வமாகத் திகழும் மாரியம்மன், தென் தமிழகத்தில் ஓர் ஊரில் ‘காச்சக்காரி அம்மன்’ எனும் திருப்பெயர் கொண்டு எழுந்தருளியிருக்கிறாள்!

திருநெல்வேலி மாவட்டம், வாசுதேவ நல்லூரில் கோயில்கொண்டிருக்கிறாள், காச்சக்காரி அம்மன். பெயருக்கேற்ப, தீராத காய்ச்சலையும் தீர்த்து வைக்கிறாள் என்கிறார்கள் உள்ளூர் பக்தர்கள்.

ஒருகாலத்தில், இந்தப் பகுதியை ஆட்சி செய்த குறுநில மன்னன் ஒருவன், இங்கே அமைந்திருந்த வேப்பமரத்தையே அம்மனாக பாவித்து வழிபட்டு வந்தான். ஒருநாள், அவனது கனவில் தோன்றிய அம்பிகை, வேம்பின் அடியில் தனக்கொரு விக்கிரகம் அமைத்து வழிபடுமாறு ஆணையிட்டாள். அதன்படியே, அம்பிகை சிலையை பிரதிஷ்டை செய்து, வழிபட்டு வந்தான் மன்னன்.

இந்நிலையில் ஒருநாள், கடும் காய்ச்சல் வந்தது மன்னனுக்கு. வைத்தியர் அளித்த சிகிச்சைகள் எதுவும் பலனளிக்கவில்லை. இதனால் கலங்கித்  தவித்த மன்னன், ‘‘மாரித்தாயே!

இது என்ன சோதனை?  எந்த வைத்தியத்துக்கும் காய்ச்சல் கட்டுப்பட வில்லையே? நீதான் அம்மா... எனது காய்ச்சலைக் குணப்படுத்தி என்னைக் காப்பாற்ற வேண்டும்’’ என்று அம்மனிடம் மனமுருகி வேண்டிக் கொண்டு, உறங்கிப்போனான்.

அன்றிரவு அவன் கனவில் தோன்றிய அம்மன், ‘என்னை மனதில் நினைத்துக்கொண்டு மஞ்சனைப் பிரசாதத்தை (விளக்கெண்ணெய், மஞ்சள்பொடி, குங்குமம் கலந்த கலவை) நெற்றியில் பூசிக்கொள்... காய்ச்சல் உடனே சரியாகும். பிறகு, சாதம் வடித்து, ரசம் வைத்து, கானப்பருப்பு துவையல் அரைத்து எனக்கு நைவேத்தியமாகப் படைத்து வழிபடு’ என்று அருள்பாலித்தாள்.

அதன்படியே, மறுநாள் அம்மனை நினைத்துக்கொண்டு நெற்றியில் மஞ்சனைப் பிரசாதத்தைப் பூசிக்கொண்டான் மன்னன். காய்ச்சல் படிப்படியாக மட்டுப்பட்டது. மன்னன் பூரணக் குணம் அடைந்ததும், அம்மன் சொன்னபடியே சாதம், ரசம், காணப் பருப்பு துவையல் படைத்து, அம்மனை வழிபட்டான். அத்துடன், மாரியம்மனின் கருவறை அருகிலேயே வேறொரு சிலையைப் பிரதிஷ்டை செய்து, அந்த அம்பிகைக்கு காச்சக்காரி அம்மன் என்று திருப்பெயரும் சூட்டினான் என தலபுராணத்தை விவரிக்கின் றனர் ஊர்மக்கள். பிற்காலத்தில் இந்த ஆலயம் இப்போது உள்ளதுபோன்று விரிவுபடுத்தி கட்டப்பட்டதாம்.

திருக்கோயிலின் பூசாரியான குருசாமியிடம் பேசினோம்...

‘‘இந்த திருத்தலத்தின் மூல தெய்வம் மாரியம்மன். மேற்குப் பிராகாரத்தில் காச்சக்காரி அம்மன் சந்நிதி உள்ளது. எனினும், ‘காச்சக்காரி அம்மன் கோயில்’ என்று விசாரித்தால் சட்டென்று வழி சொல்லும் அளவுக்கு, இந்த அம்மனின் பெயர் துலங்கிவிட்டது’’ என்றவர், தொடர்ந்து...
‘‘காய்ச்சல் குணமடையாமல் தொடர்ந்து நீடித்தால், காச்சக்காரி அம்மனின் பிரசாதமான மஞ்சனையை நெற்றியில் பூசிக்கொண்டு, ‘காய்ச்சல் குணமடைந்ததும் காய்ச்சல் படையல் படைக்கிறேன்’ என்று வேண்டிக்கொள்ள வேண்டும். அம்மன் அருளால் கைமேல் பலன் கிடைக்கும். காய்ச்சல் சீக்கிரம் குணமாகிவிடும். அப்படி காய்ச்சல் சரியானதும் கோயிலுக்கு வந்து, புழுங்கல் அரிசி சாதம் வடித்து, கடுகு, எண்ணெய் சேர்க்காமல் கொதிரசம் வைத்து, துவரம்பருப்பை குழைவாக அவித்து வைத்து, கானத் துவையல் அரைத்து வைத்து, மிதுக்கு வத்தல் பொரித்துப் படைத்து... ஒரு ஆள் சாப்பிடும்படியாக, வாழை இலையில் பரிமாறி அம்மனுக்குப் படைக்க வேண்டும். அத்துடன், காச்சக்காரி அம்மனுக்கு  சிவப்பு அரளிப்பூ மாலை சாற்றி நேர்த்திக்கடனைச் செலுத்த வேண்டும்.

படையல் எதிலும் உப்பு சேர்க்கக் கூடாது. எவருக்குக் காய்ச்சல் வந்ததோ, அவருடைய கையாலேயே பரிமாற வேண்டும். அதேபோல, காய்ச்சல் சரியானதும் நேர்த்திக்கடனை செலுத்த வேண்டும் என்பதில்லை. நேரம் கிடைக்கும்போது தவறாமல் வந்திருந்து நேர்த்திக்கடனை நிறைவேற்றலாம்’’ என்றார்.

கோயிலிலேயே சமையல் செய்வதற்கான கல் அடுப்புகளும், துவையல் அரைப்பதற்கு அம்மிகளும் இருக்கின்றன.

சாதாரண வைரஸ் காய்ச்சல் தொடங்கி சிக்குன் குனியா வரை எல்லா காய்ச்சலுக்கும், இந்த அம்மனை வேண்டிக்கொண்டால், சீக்கிரம் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்