நமக்குள்ளே! | Editor Opinion - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (28/11/2017)

நமக்குள்ளே!

வளிடமிருந்து ஓர் ஒளி பிறந்தது... வண்ணங்கள் மாறின; உலகம் விரிந்தது; மக்கள் தன் எண்ணங்களால் அழகாக மாறியிருந்தார்கள். இந்தக் கனவை மெய்ப்பிக்கும் பணியில் நாம் இருக்கிறோம்.

இதோ... இருபதாம் ஆண்டில் அடியெடுத்திருக்கும் அவள், புத்தம்புதுப் பூவாக உங்கள் கரங்களில் இன்னும் எழிலுடன் மலர்கிறாள். பெண்களின் ஒரே குரலாக வெற்றிக்கதைகளோடு, சாமான்யர்கள் முதல் பிரபலங்கள் வரை புடைசூழ உங்கள் வீடு தேடி வருகிறாள். உழைக்கும் பெண்களின் கதைகள் முதல் தொழிற்பயிற்சி வரை தேடிக் கண்டெடுத்துக்கொண்டு உங்கள் கைகளில் தவழ்கிறாள்.

* அமெரிக்கா முதல் தமிழகம் வரை பெண்களின் உலகில் பதினான்கு நாள்களில் நடக்கும் சுவாரஸ்ய சம்பவங்கள், சிந்திக்க வேண்டிய நிகழ்வுகள், ஊக்கம் தரும் செய்திகளின் தொகுப்பு.

* செலிப்ரிட்டிகளின் மனதுக்கினிய `அவள்’ பற்றிய மனதை தொடும் ஆச்சர்யமான தகவல்களுடன் ‘அவளும் நானும், நானும் அவளும்’.

* அங்கம்மா முதல் தங்கம்மன் வரை, மாரியம்மன் தொடங்கி மாரம்மா வரை தமிழகத்தின் கிராமியப் பெண் தெய்வ வழிபாடு பற்றிய சிலிர்ப்பான தகவல் தொகுப்புகள், அவற்றுள் ஆழ்ந்துகிடக்கும் நாட்டார் வழக்காற்றுக் கதைகள், பூஜைமுறைகள் பேசும் ‘தெய்வ மனுஷிகள்’.

* ‘உடலைக் கசக்கி உதிர்த்த வியர்வையின் ஒவ்வொரு துளியிலும் கண்டேன் இவ்வுல குழைப்பவருக்குக் குரிய தென்பதையே’

- பாரதிதாசன் கூறியதுபோலவே, உழைப்பவரின் உடைமையான உலகில் உழைப்பையும் பெண்மையையும் தோளோடு தோள் சேர்த்துக்கொண்டு, இடர்ப்பாடுகளின் நடுவே சாதித்துக் கொண்டிருக்கும் நம்பிக்கைப் பெண்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் ‘உழைக்கும் பெண்களின் உண்மைக் கதைகள்’.

* வீட்டிலிருந்தபடியே குடும்பப் பொருளாதாரத்தை உயர்த்தும் வித்தையில் கைதேர்ந்திருக்கும் அபூர்வப் பெண்களின் வழிகாட்டலுடன், வாசகிகளுக்குத் ‘தொழிற்பயிற்சி’.

இன்னும் நம்முடைய எல்லா தேடல்களுக்கும் தீர்வுகளைத் தேடித்தரும் ஆவலுடன், அன்பு, அறிவு, அழகு ஆகிய மூன்று முத்தான அம்சங்களோடு இல்லம் தேடிவரும் அவளால் வாழ்க்கை வசப்படட்டும், வளம்பெறட்டும்!

உரிமையுடன்,