கொசுவை விரட்டுமா லெமன் கிராஸ்?

தோட்டக்கலைதுரை.நாகராஜன்

பால்கனி இல்லாத அபார்ட்மென்ட் போர்ஷனில் வசிக்கும் எனக்கு, செடி வளர்க்கும் ஆசையைத் தவிர்க்க முடியவில்லை. வெயில் அதிகம் வராத வீட்டினுள் வளர்க்கக்கூடிய செடிகள் ஏதாவது சொல்ல முடியுமா? லெமன் கிராஸ் செடி வைத்தால் கொசுக்கள் வராது என்கிறார்களே... இது உண்மையா? இச்செடியை வளர்க்க வெயில் தேவையா?

- கே.புவனேஸ்வரி, சென்னை - 91

பதில் தருகிறார், மாடித்தோட்ட வல்லுநர் சுபஸ்ரீ...

“அபார்ட்மென்ட்டில் வசிப்பவர்களுக்கும் செடி வளர்க்கும் ஆசை வருவது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனால், சிறிதளவு இடம் கொண்ட பால்கனி இருந்தால்தான் செடிகளை வளர்க்க முடியும். வெயில் படாமல் வீட்டினுள் செடி வளர்க்க விரும்புகிற உங்களுக்கு, குரோட்டன்ஸ் வகை செடிகள்தான் சரியான தீர்வு. மற்ற செடி வகைகளுக்கு வாரத்தில் சில மணி நேரங்களாவது சூரிய வெளிச்சம் தேவைப்படும். வாரத்தில் இரண்டு நாள்களில் இரண்டு அல்லது மூன்று மணிநேரம் வெயில் படும்படி தாவரங்களை வைத்தால் போதும். மீண்டும் இரண்டு நாள்கள் வீட்டினுள் வைத்துக் கொள்ளலாம். இந்த முறையைப் பின்பற்றினால் மாடித்தோட்டத்தில் வளர்க்கும் அனைத்துச் செடிகளையும் வீட்டிலேயே வளர்க்க முடியும்.

லெமன்கிராஸ் செடிகளை வளர்த்தால் மட்டுமே கொசுக்கள் வருவது நின்றுவிடாது. லெமன்கிராஸ் செடி இலையைக் கசக்கி வீட்டின் மூலையிலோ, கொசு அதிகமாக உள்ள பகுதிகளிலோ வைத்துவிட்டால் கொசுகள் வராது. லெமன்கிராஸ் செடிக்கும் நிச்சயமாக வெயில் தேவை. வீட்டிலும் வெளியிலும் தனித்தனியாக வைத்தும் பராமரிக்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!