Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நெருப்பைக் கொண்டு வரத்தான் வத்திக்குச்சி இருக்கிறதே!

வாழ்வை மாற்றிய புத்தகம் ஆர்.வைதேகி

``சிறுவயதில் இருந்தே புத்தகங்களுடன் எனக்கு நெருங்கிய நட்பு உண்டு. பொம்மைகளுடன் விளை யாடும் வயதிலேயே எனக்குப் புத்தகங்கள் அறிமுகம். ஆனால், புனைகதைகள் படிப்பதில் பெரிதாக ஆர்வம் இருந்ததில்லை. மகான்களின் வாழ்க்கை வரலாறுகளையும், சுயசரிதைப் புத்தகங்களையும்தாம் அதிகம் படித்திருக் கிறேன்.

`லிவிங் வித் தி ஹிமாலயன் மாஸ்டர்ஸ்' என்ற புத்தகம், ஸ்வாமி ராமா எழுதியது. இந்தப் புத்தகம் இசையுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புடையதாகவே எனக்குத் தோன்றியது.

ஆன்மிக குருமார்கள், அவர்களின் சிஷ்யர்களை நடத்துகிற விதத்துக்கும், இசையில் உள்ள குரு சிஷ்ய பரம்பரைக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கும். ஈகோவைக் கட்டுப் படுத்துவதில் இருந்து, ஒரு மாணவரைச் செதுக்குவதில்... அவர்களிடம் உள்ள சிறப்பான விஷயங்களை வெளிக்கொண்டுவருவதில்... இப்படி இசைக்கும் ஆன்மிகத்துக்குமான ஒற்றுமைகள் அதிகம். கர்னாடக சங்கீதமோ, இஸ்லாமியரின் சூஃபி இசையோ - ஒரு குருவிடம் சென்று கற்றுக்கொள்கிறபோது, அதில் ஆன்மிகம் என்பதும் பின்னிப் பிணைந்துதான் வரும்.

நான்  ஓர் இசைக்கலைஞரிடம் சாரங்கி என்கிற வாத்தியம் கற்றுக்கொண்டேன். அவர் பிறப்பால் இஸ்லாமியர். ஆனாலும், அவர் இசை கற்றுக்கொடுக்கும் அறையில் சரஸ்வதி சிலை இருக்கும். ஊதுவத்தி ஏற்றி வைப்பார். தினமும் மாலை போடுவார். மதவேறுபாடுகள் எல்லாம் அங்கே காணாமல் போய்விடும்.

ஸ்வாமி ராமாவும் அவரது குருவும் இமயமலையில் எங்கேயோ போய்க்கொண்டிருப்பார்கள். ஒரே குருவிடம் கற்றுக்கொள்கிற சிஷ்யர்களை `குருபாய்' என்பார்கள். அதாவது, எல்லோரும் உடன்பிறந்தவர்கள் என்கிற அர்த்தம்.

ஒரு சிஷ்யர், `நான் பத்து வருடங்கள் தவம் செய்த அனுபவத்தில், இப்போது என்னால் தனியே வெறும் கையால் நெருப்பை உண் டாக்க முடியும்' என்று சொல்லி கையாலேயே நெருப்பை உண்டாக்குவாராம். அப்போது குரு, `நீ பத்து வருடங்கள்  நெருப்பைக் கொண்டு வரப் போராடியதற்குப் பதிலாக கடவுளை நினைத்திருந்தால், இந்நேரம் உன் இலக்கை அடைந்திருப்பாய்... நெருப்பைக் கொண்டுவரத்தான் வத்திக்குச்சி இருக்கிறதே... உன் நேரத்தை ஏன் வீணடித்தாய்?' எனக் கேட்டாராம். இந்த மாதிரிக் கதைகள் இசையிலும் உண்டு.

முன்பெல்லாம் ஒரு குருவிடம் சிஷ்யர் கற்றுக்கொள்ளும்போது, குரு சொன்னதைவிடக் கொஞ்சம் அதிகம் வாசித்தாலோ, பாடினாலோ, 'ஓஹோ... அவ்வளவு பாடத் தெரிந்துவிட்டதா? உனக்கு அதிகம் தெரியும் என்பதைக் காட்டுகிறாயா?' எனக் கேட்பார்கள். அதாவது சொல்லிக் கொடுத்ததை மட்டும் செய்தால் போதும் என்கிற தொனி இருக்கும். நிறைய திறமைகள் உள்ள குழந்தைகளுக்கு அகங்காரம் வந்துவிடக் கூடாது, தனக்கு எல்லாம் வருகிறது எனத் தெரியக் கூடாது என்கிற பார்வை இருந்தது.

அந்தக் காலத்தில் குருகுலத்தில் படித்த குழந்தைகளுக்குச் சாதத்துடன் விளக்கெண்ணெய் கலந்து தருவார்களாம். படிப்பில் மட்டுமே நாட்டம் உள்ள குழந்தைகளுக்கு விளக்கெண்ணெய் வாசம் தெரியாது. யாரா வது ஒருவர் ‘என்ன இது... சாப்பாட்டில் விளக் கெண்ணெய் வாசனை வருகிறது' எனக் கேட்டால் போதும்... `எப்போது நீ சாப்பாட்டுக்கு முக்கியத் துவம் கொடுத்து விளக் கெண்ணெய் வாசத்தைக் கண்டுபிடித்தாயோ, அப்போதே உனக்குப் படிப்பில் நாட்டம் போய்விட்டதாக அர்த்தம்' என அனுப்பி விடுவார்களாம். இந்தப் புத்தகத்தைப் படித்தபோது இசைப் பயிற்சிகளுடன் பல கதைகளையும் சம்பவங்களையும் நான் தொடர்புபடுத்திப் பார்த்தேன்.

அப்போது எனக்கு 14 வயது. அது நான் இசைத்துறைக்கு வராத காலம். அந்தப் புத்தகம் என் எண்ண ஓட்டங்களைப் பெரிய அளவில் செதுக்கியது என்று சொல்வேன். ஒழுக்கம், சிஷ்யராக நான் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள், வாழ்கிற முறை, அடைய வேண்டிய லட்சியம், அதை அடைவதற்கான பாதையில் நான் சரியாகத்தான் போய்க்கொண்டிருக்கிறேனா என்றெல்லாம் எல்லா விதங்களிலும் என் சிந்தனைகளையும் எண்ண ஓட்டங்களையும் நெறிப்படுத்திய  புத்தகம் இது. மிக இளவயதில் என்னுள் இந்தப் புத்தகம் ஏற்படுத்திய தாக்கம், இன்று வரை என் வாழ்க்கையைச் சரியான விதத்தில் வாழ்வதற்கு என்னை வழிநடத்திச் செல்கிறது!''

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
சேவை இங்கே தேவை!
அரபிக் கடலோரம் த்ரில் தேனிலவு!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close