நமக்குள்ளே!

தொலைக்காட்சியைப் பார்த்தபோதெல்லாம் `சென்னை மிதக்கிறது’ என்கிற காட்சிகள்தாம் கண்களை மிரட்டின கடந்த வாரங்களில்! உண்மையில், சென்னையின் எல்லையோரப் பகுதிகளும், அதன் அருகே அமைந்துள்ள காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் சில பகுதிகளும்தாம் நாள்கணக்கில் மிதந்தன; இன்னமும்கூட மிதக்கின்றன. தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும்கூட இத்தகைய பாதிப்புகள்தாம்.

வெள்ளமென மழைநீர் பெருக்கெடுத்து வீடுகளைச் சூழ்ந்துகொண்டு மிரட்ட, ‘அய்யோ... கொட்டித் தீர்க்குதே மழை; இது எப்பத்தான் நிக்குமோ?’ எனும் வலி நிறைந்த புலம்பல் கேட்பது வாடிக்கையாகிவிட்டது. கடந்த 2015-ம் ஆண்டின் சென்னைப் பெருவெள்ளம் கொடுத்த பாடத்துக்குப் பிறகும், அந்த ஓசை குறையவில்லை என்பதுதான் வேதனை!

ஒவ்வொருவரும் தங்களின் உழைப்பின் பலனாகவே வீடு, மனைகளை வாங்குகிறார்கள். நகரங்களுக்குள் வீடு, மனை வாங்கும் அளவுக்கு வசதி இல்லாதவர்களும் நகரச் சந்தடிக்கு வெளியே சௌகரியமாக வாழ நினைப்பவர்களும்தாம் புறநகர்ப் பகுதிகளைத் தேடுகிறார்கள். வீட்டு வாடகையைச் சமாளிக்க முடியாமல், ‘சொந்த வீடுதான் சொர்க்கம்’ என நினைக்கும் நடுத்தரக் குடும்பங்களும் இதில் அடக்கம். இவர்களில் பலரும் கண்கவர் ரியல் எஸ்டேட் விளம்பரங்கள் மற்றும் சலுகைகளை நம்பி ஏமாந்திருப்பதை இந்த மழை வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கிறது.

மனையின் தரத்தைப் பற்றிச் சரிவர யோசிக்காமல், நீர்நிலைகளிலும் வீடு கட்டக்கூடாத இடங்களிலும் வாங்கியதன் விளைவு... வழக்கமாகப் பெய்யக்கூடிய பருவமழைக்குக்கூட தாங்க முடியாமல், ‘வீட்டுக்குள் வெள்ளம்’ என்று மீடியாக்களில் படம்பிடிக்கப்படுகிறது. விதிகளை மீறி வீடுகள் கட்டப்பட்டதால், உரிய இடத்தில் தேங்க வேண்டிய நீர் வெள்ளமாகப் பெருக்கெடுத்து, விதிமுறைகளை மதித்துக் கட்டப்பட்ட வீடுகளையும் மூழ்கடிக்கிறது. பலர் ஏமாந்தது மட்டுமல்லாது... இதன் காரணமாக வேறு பலரையும் அவர்கள் பாதிப்படைய வைக்கின்றனர் என்பதையே இதெல்லாம் காட்டுகிறது.

கத்திரிக்காய், வெண்டைக்காய் வாங்கும்போதே, ஒன்றுக்கு நான்கு முறை புரட்டிப்பார்க்கும் நாம்... நம் தலைமுறையினருக்கும் தாங்க வேண்டிய வீடு, மனை விஷயத்தில் அக்கறையின்றி கோட்டை விட்டதன் பலனை இப்போது அனுபவிக்கிறோம்.

நடந்துவிட்ட தவறுகளுக்குப் பரிகாரம் தேடுவது ஒருபுறமிருக்க... புதிதாக வீடு, மனை தேடுவதென்றால் இந்த மழைக்காலத்திலேயே தேடுங்கள். நீர்வழி எது, நீர்நிலை எது, நீர் தேங்கும் பூமி எது என்பதையெல்லாம் கண்கூடாகக் கண்டுணருங்கள்.

சிலரின் மோசமான அனுபவங்கள்தானே பலருக்கும் நல்ல பாடம். இனியாவது, இயற்கையின் பாதையறிந்து பயணிப்போம்!

உரிமையுடன்,

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick