அறம் தொடரட்டும்!

அவள் திரை  நிவேதிதா லூயிஸ்

விண்ணில் ஏவப்படும் ராக்கெட்டுக்கும் குடிநீர் வற்றிப்போன வறண்ட கிராமத்துக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்... `அறம்' தவிர? தண்ணீருக்கான நம் தேடல் இன்னும் காலம் செல்லச் செல்ல எத்தனை கொடூரமானதாக இருக்கப்போகிறது என்பதைப் பலர் சொல்லிக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால், கண்முன் ஒரு வறண்ட கிராமமும், அதன் அருகிலேயே இருக்கும் சதிஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையமும் காட்சிகளாக விரியத் தொடங்குகின்றன. அன்பு மகளின் பிறந்தநாளுக்கு 350 ரூபாய் கேக்கே போதும் என்று இயலாமையால் ஆர்டர் செய்துவிட்டுத் திரும்பும் தாய். அவளோடு நீச்சல் வீரனாகும் கனவுகளை நெஞ்சில் சுமக்கும் மகன், 600 ரூபாய் விலையில் ஆஜானுபாகுவாக நிற்கும் `இந்தியா' என்று எழுதப்பட்ட கேக்கை ஏக்கமாகப் பார்த்துச் செல்லும்போதுதான் நிமிர்ந்து உட்காருகிறோம். கேக்கில் தங்கையின் பெயரைத் தமிழில் எழுத விரும்பும் சிறுவனை விரட்டி ஆங்கிலத்தில் எழுதி வாங்கி, அதை மலையாளத்தில் மொழிபெயர்க்கும் பேக்கரி சேட்டன், ஆழ்குழாய்க் கிணற்றில் குழந்தை விழுந்ததைச் சுற்றி நடக்கும் ஊடக விவாதங்களில் பவுடர் அப்பிய கருத்தாளர்கள், குடிக்கத் தண்ணீர் இல்லாத கிராமத்தில் போட்டோவுக்கு போஸ் கொடுக்கவென குழந்தைக்குச் சொட்டு மருந்து விடும் செவிலி, ஒருபுறம் ராக்கெட் தளமும், மறுபுறம் ஆழ்குழாய்க் கிணறும் என்று படம் முழுக்க விரிகின்றன காட்சிகள்.

வெயிலில் இறங்கி நிற்கும் கலெக்டர் அம்மாவுக்குக் குடைபிடிக்க ஓடிவரும் அதிகாரி, பணிநிமித்தம் வண்டியில் சென்று கொண்டிருப்பதாகப் பொய் சொல்லிவிட்டு ரோட்டோரத்தில் நின்று `தம்' அடிக்கும் அதிகாரி, கிராமத்தினரைக் கலகக்காரர்களாகக் காட்ட முதல் கல்லை எறிந்து கலவரத்தைத் தொடங்கும் காவல்துறை அதிகாரி என, அரசு இயந்திரத்தை இயக்கிக்கொண்டிருக்கும் அதிகார வர்க்கத்தை அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டியிருக்கிறார் இயக்குநர். கபடிக் கனவுகளைத் தொலைத்துவிட்ட பெயின்டருக்கும் அவர் மனைவிக்கும் இடையேயான காதல், பொட்டல் காட்டில் மலரும் மஞ்சள் நெருஞ்சிப்பூபோல ஜொலிக்கிறது - அத்தனை அழகியல் அதில்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick