``குண்டுச் சத்தத்துக்கு ஒருநாளும் பயந்ததில்ல!’’ | Indian Freedom Fighter Sivagami - Aval Vikatan | அவள் விகடன்

``குண்டுச் சத்தத்துக்கு ஒருநாளும் பயந்ததில்ல!’’

சிவகாமி பாட்டியின் சிலிர்க்கவைக்கும் அனுபவங்கள்நேதாஜியின் வீராங்கனைகள் - 1   யாழ் ஸ்ரீதேவி - படம்: என்.கண்பத்

‘`செல்லுவோம் செல்லுவோம்
நம் ஜென்மபூமி செல்லுவோம்
நம் விரோதி வெள்ளையனை
நாட்டைவிட்டு ஓட்டுவோம்
நாடு முழுவதும் ஒரே நீதி நடந்திட வழிகாட்டுவோம்
நேதாஜி சொன்னபடி
டெல்லிக்கே நாம் செல்லுவோம்
டெல்லிக்கே நாம் செல்லுவோம்
மூவர்ணக்கொடி நாட்டுவோம்
செல்லுவோம் செல்லுவோம்
ஜென்மபூமி செல்லுவோம்
ஜான்சிராணி லட்சியத்தை
ஜல்தியில் நிறைவேற்றுவோம்
தரணிதனிலே சமதர்மத்தை நிலைநாட்டுவோம்...’’


- குரலின் நடுக்கத்தை மீறிப் பாடுகிறார் சிவகாமி பாட்டி. இந்தியச் சுதந்திரப் போராட்டக் காலத்தில் நேதாஜி படையில் சேர்ந்து களப்பணியாற்றிய விடுதலைப்போராட்ட வீரர். இன்று தர்மபுரி மாவட்டம், அன்னசாகரத்தில்  சிறிய வாடகை வீட்டில் தனித்த வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருப்பவருடன் பேசினால், கொட்டுகிறது வரலாறு.

``அது சுதந்திரப் போராட்டக் காலம். ஆங்கிலே யரை நாட்டைவிட்டு வெளியேற்ற இந்தியாவில் போராட்டங்கள் வெடிக்க ஆரம்பிச்சது. காந்தியடிகள் அகிம்சையைக் கையில் எடுக்க, அதற்கு நேரெதிரா இந்தியத் தேசிய ராணுவத்தை (ஐஎன்ஏ) நிறுவினார் சுபாஷ் சந்திரபோஸ். வெளிநாடுகளில் இருந்த இந்தியர்களும் அந்தந்த நாட்டில் இருந்தபடியே தங்களோட தாய்நாட்டுக்காகப் போராடினாங்க.

எங்க குடும்பம் மலேசியாவின் கோலாலம்பூருக்குப் பஞ்சம் பிழைக்கப் போனப்போ, எனக்கு ஒன்றரை வயசு. எங்கப்பா மாரிமுத்து முதலியார், அம்மா சின்னத்தாயி ரெண்டு பேரும் என்னையும் எங்க அண்ணன் பரமானந்தத்தையும் அங்கே அரும்பாடுபட்டு வளர்த்தாங்க. எனக்கு 11 வயசும், அண்ணனுக்கு 15 வயசும் இருக்கும். சுபாஷ் சந்திரபோஸ் 1942-ல் இந்திய விடுதலைக்காக `ஐஎன்ஏ’-வை நிறுவினார். அதோட ஒரு பிரிவு, ‘பாலசேனா’ அமைப்பு. இளைஞர்களுக்கான அந்தக் குழுவுல நானும் எங்கண்ணனும் இணைந்து விடுதலைப் போராட்டத்துல கலந்துகிட்டோம்’’ - 80 வயதைத் தாண்டிவிட்ட சிவகாமி பாட்டி, தன் நினைவு அடுக்குகளில் தொலைந்துபோன சம்பவங்களையும் நிதானத்துடன் மீட்டெடுத்துத் தொடர்கிறார்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick