நமக்குள்ளே!

வீட்டைவிட்டு வெளியே செல்வதற்குக்கூட பெண்களுக்குச் சமூகத் தடை நீடித்த காலத்திலேயே, இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்றவர் இந்திரா காந்தி. கூடுதல் பொறுப்பாகப் பாதுகாப்புத்துறையையும் தன்னிடத்திலேயே அவர் வைத்திருந்தார். இந்திரா ஆட்சிப் பொறுப்புக்கு வந்த 60, 70 காலகட்டத்தில் ‘பெண் விடுதலை’ என்பது அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலருக்கு மட்டுமே வாய்த்திருந்தது. இன்றோ... பெருமளவில் பல படிநிலைகளைக் கடந்து பல்வேறு துறைகளில் வெற்றிக்கோட்டையை எழுப்பி வருகிறார்கள் பெண்கள்.

ஆணுக்குப் பெண் சமம் என்பதை வெறும் போதனையாக மட்டும் கொள்ளாமல், தங்கள் அசாத்திய சாதனைகள்மூலம் பல துறைகளில் செயல் படுத்தியும் வருகிறார்கள். ஒரு காலத்தில் பெண் விமானம் ஓட்டினால், ‘விமானம் ஓட்டும் முதல் பெண்’ என்று அண்ணாந்து பார்த்த இந்த இந்திய சமூகத்தில், இன்று விண்வெளியை வலம்வரும் பெண்களும் இருக்கிறார்கள். ‘அடுக்களை மட்டுமே பெண்களுக்கு’ என்கிற நிலையை மாற்றி, ஆகாயத்திலும் பறக்கிறார்கள்.

பெரும்பான்மையான துறைகளில் ஆண் பெண் பேதமில்லாமல் சமநிலை ஏற்பட்டுக்கொண்டிருக்கும் இக்காலத்தில், நாட்டின் மிக முக்கியமான பதவிகளில் ஒன்றான பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவியை அடைந்திருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன். உயர்பதவியை ஏற்றிருக்கும் அவருக்கு வாழ்த்துகள் சொல்லி மகிழும் அதேவேளையில், தான் பொறுப்பேற்றிருக்கும் துறையில் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்தவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் நிர்மலா சீதாராமன் என்பதை மட்டும் இங்கே அவரிடம் வலியுறுத்துவோம்.

ஆம், ‘பாதுகாப்புத்துறை என்பது, பெண்களுக்கான துறை அல்ல’ என்பது தொடங்கி, பிற்போக்குத்தனமான பல்வேறு எண்ணங்கள் இப்போதும் இங்கே நிறைந்தே இருக்கின்றன. பாதுகாப்புத் துறையில் இருக்கும் பெண்களுக்கு எதிரான செயல்கள் இப்போதும் நீடிக்கவே செய்கின்றன. அவற்றையெல்லாம் கண்டறிந்து உடனடியாகத் தீர்வு காண்பதுடன், மக்கள் நலனில் அக்கறை காட்டும் சிறந்த அமைச்சராக, பாலினப் பாகுபாடின்றி நிர்மலா சீதாராமன் அனைவர் மனதிலும் இடம்பிடிப்பார் என நம்புவோம்.

உரிமையுடன்,

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick