நமக்குள்ளே!

ழைய கேசட்டுகள், சிடி-க்கள், டிவிடி-க்கள், பென் டிரைவ்கள் என வீடு முழுக்க சிதறிக்கிடந்தப் பொருள்கள் எல்லாவற்றையும் ஒரே இடத்தில் சேகரித்து தூசுத்தட்டித் துடைத்து அதற்கென தனியாக உருவாக்கியிருந்த அலமாரியில் அடுக்கி வைத்துக்கொண்டிருந்தாள் தோழி. கூடவே வீணை, மிருதங்கம், தம்பூரா என இசைக்கருவிகள் அந்த வீட்டின் வரவேற்பறையை அலங்கரிக்கத் தவறவில்லை.

 `தோழியும் அவள் கணவரும் இசைப்பிரியர்கள் என்கிற தகவலைக்கூட  இவ்வளவு நாள்களாகத் தெரிந்துவைத்துக்கொள்ளாமல் இருக்கிறோமே’ என யோசித்துக்கொண்டிருக்கும்போதே, கையில் தேநீர் கொண்டுவந்து கொடுத்தாள் அவளுடைய செல்ல மகள்.

``சம்யுக்தா நல்லா பாடுவா... அவளுக்குப் பாட்டுல இன்ட்ரெஸ்ட் இருக்குன்னு தெரிஞ்சதும், மியூசிக் கிளாஸ்ல சேர்த்துவிட்டேன். அவளுக்காகத்தான் இந்த மியூசிக் கலெக்‌ஷன்...’’ என்றார் ஆர்வம் பொங்க. `‘இந்த தபேலா இந்த வருஷத்துக்கான புதுவரவு. ஒவ்வொரு தீபாவளிக்கும் ஏதாவது ஒரு மியூசிக்கல் கிஃப்ட் வாங்கித் தந்திடுவேன்’’ என்றாள் தோழி. அவளைப் போலவே நண்பர் ஒருவர் எல்லா பண்டிகை நாள்களிலும் புத்தகங்கள் வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

நகைகள், பாத்திரங்கள், துணிமணிகள், பட்டாசுகள் எனப் பண்டிகைகளைச் செலவுசெய்து கொண்டாடுவதே பலரின் வழக்கம். தேவையோ, இல்லையோ பண்டிகையென்றால் தேவையில்லாத பொருள்களைக்கூட கடன் வாங்கியாவது வாங்கிவிட வேண்டும் என்கிற மனநிலையில்தான் இருக்கிறார்கள்.

பண்டிகை நாள்கள் வருவதே, நம் விருப்பமான செயலை சந்தோஷமான மனநிலையில் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான். தோழியைப்போல தன் குடும்பத் தேவைக்காகச் செலவு செய்து கொள்பவர்களாக இருந்தாலும் சரி... `ஊரோடு இயைந்து வாழ்' என்பதுபோல பண்டிகைக்கான க்ளிஷே செலவுகளைச் செய்பவராக இருந்தாலும் சரி... நம் கைக்கடங்காத செலவுகளால் மகிழ்ச்சி கிட்டாது என்பதை மட்டும் புரிந்துகொண்டால் எந்நாளும் தீபாவளிதான்!

உரிமையுடன்,

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick