ஆசை மருமகனும் ஆடு வளர்த்த மாமியாரும்!

சிறப்புச் சிறுகதைபாரததேவி, ஓவியம் : கோ.ராமமூர்த்தி

செல்லம்மாளுக்கும் அய்யாச்சாமிக்கும் ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு என்று ஒரே மகள்தான் பிறந்திருந்தாள். அவளுக்கு `தங்கப்பவுனு’ என்று பெயர் வைத்தார்கள். ஊரே அவளை `பவுனு... பவுனு’ என்று கூப்பிடுவதைப் பார்த்து, செல்லம்மாளுக்கும் அய்யாச்சாமிக்கும் சந்தோஷம் தாங்க முடியவில்லை.

போன சித்திரையில்தான் பக்கத்து ஊரிலிருந்த தன் தூரத்துச் சொந்தமான அண்ணன் மகன் ராசகோபாலுக்கு, ஆசை ஆசையாகத் தன் மகளைக் கட்டிக்கொடுத்திருந்தாள் செல்லம்மா. அஞ்சாறு மாதம்தான், பின்னாலேயே தீபாவளி வந்துவிட்டது.

தன் ஆசை மருமகனையும் அருமை மகளையும் தீபாவளிக்குக் கூட்டிவந்து, தன் வீட்டில் இரண்டு நாள்கள் தங்கவைத்து, செழிக்கக் கறி சாப்பாடு போட வேண்டும்; அவர்கள் ஊருக்குப் போகும்போது சிறு நார்ப்பெட்டி நிறைய உப்புக்கண்டம் கொடுத்துவிட வேண்டும்; சம்பந்தக்காரர்களும் சரி, ஊர்க்காரர்களும் சரி... நம்மைப் பார்த்துப் பெருமையாகப் பேச வேண்டுமென்று நினைத்தாள். அதனால், தீபாவளி வருவதற்கு நான்கு மாதங்கள் இருக்கும்போதே, ஆயிரம் ரூபாய்க்கு ஓர் ஆட்டுக்குட்டி வாங்கி, நாள் முழுக்க அவத்திக்கொளையும், பச்சை அறுகம்புல்லும், பிண்ணாக்குத் தண்ணியுமாகவிட்டு ஆட்டைக் கொழுக்க வளர்த்தாள். கறுப்பு நிற ஆடு, நெற்றியில் பளிச்சென்று இரண்டு வெள்ளைக்கோடு வாங்கியதில் பார்க்க அம்சமாயிருந்தது. ஊருக்குள் போகிறவர்கள், வருகிறவர்கள் இவள் மருமகனுக்காக ஆடு வளர்ப்பதைப் பார்த்து, ``பாருத்தா, ஊருக்குள்ள இருக்க எல்லாரும் தீபாவளிக்கு மருமவனக் கூட்டிட்டுவந்து ஒரு எட கறி எடுத்து கொழம்பு வெப்பாக... இல்லாட்டா ஒரு கோழிய அடிச்சி வெஞ்ஞனம் வெப்பாக. இவ என்னன்னா மருமவனுக்காக ஒத்த ஆட்டவில்ல வளக்கா... இவளுக்கு வந்த மருமவன் கொடுத்து வெச்சவந்தேன்’’ என்று பாதிப் பொறாமையாகவும் பாதிப் பெருமையாகவும் பேசினார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick