நமக்குள்ளே! | Editor Opinion - Aval Vikatan | அவள் விகடன்

நமக்குள்ளே!

ரெங்கும் ஒரே பேச்சுதான்... ‘டெங்கு’

ஒரு வைரஸே.. இப்போது வைரலாகியிருக்கிறது. இந்த நோய்குறித்த பீதி, டெங்குவைவிட மிகவேகமாகப் பரவிவருகிறது!

ஒருபுறம் தீபாவளி பண்டிகைக்காகக் கடைவீதிகளில் கூட்டம் பெருக்கெடுத்துக் கொண்டிருக்க, அதற்கும்மேலாக இந்த டெங்குவின் பாதிப்பால் மருத்துவமனைகளை நோக்கியும் பெருங்கூட்டம் படையெடுக்கிறது.

‘ ஏடிஸ் எனப்படும் பகலில் கடிக்கும் கொசுவால் மட்டுமே பரவும் இந்த நோய், குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து வயதினருக்கும் வரலாம். திடீரென ஏற்படும் கடுமையான காய்ச்சல், தலைவலி, கண்களுக்குப் பின்புறம் வலி, விழி சிவந்து வெளிச்சத்தைப் பார்க்கமுடியாமல் கூச்சம் ஏற்படுதல், உடலில் சிவப்புப் புள்ளிகள் தோன்றுதல், எலும்புகளை முறித்துப் போட்டதைப்போல கடுமையான வலி... இவையெல்லாம் நோய்க்கான அறிகுறிகள்' என்று எச்சரிக்கும் மருத்துவர்கள், `டெங்கு என்பது கட்டுப்படுத்தமுடியாத உயிர்க்கொல்லி நோயல்ல. வரும்முன் காக்கும் எச்சரிக்கையும், ஒருவேளை நோய் வந்துவிட்டால் முறையாக எடுத்துக்கொள்ளப்படும் சிகிச்சையுமே போதுமானது' என்றும் நம்பிக்கையூட்டுகிறார்கள்.

ஆக, இந்தநேரத்தில் நமக்குத் தேவையானதெல்லாம் பதற்றமல்ல... விழிப்பு உணர்வே. இதை நாம் மட்டும் ஏற்படுத்திக்கொண்டால் போதாது, சுற்றம்... நட்பு என்று அக்கம்பக்கத்தினருக்கும் ஏற்படச் செய்யவேண்டும். இந்த நோய் வேகமாகப் பரவுவதற்குச் சுற்றுப்புறத் தூய்மையின்மை முக்கியமான காரணம் என்பதை நாம் மனதில் கொள்ளவேண்டும். டெங்கு குறித்த விழிப்பு உணர்வு விளம்பரங்கள் எவ்வளவு வந்தாலும், அவற்றை வெறுமனே பார்ப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் `நமக்கு நாமே’ சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள வேண்டுமென்பது எக்காலத்துக்கும் கட்டாயம் என்பதை நாம் உணரவேண்டும்.

நோய்க்குக் காரணமான ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகாதவாறு தூய்மைப் பணியை இந்த நொடியே மேற்கொள்வது அவசியம். முக்கியமாக வீட்டைச்சுற்றி நீர்தேங்காமல் பார்த்துக் கொள்வது அவசியம் என்றும் எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். எனவே, இதற்கு இடம்கொடுக்காத வகையில் வீட்டிலும், வீட்டைச் சுற்றிலும் தூய்மையைப் பராமரிக்க வேண்டியது... நம்முடைய பொறுப்பு மட்டுமே! அக்கம்பக்கத்து வீடுகளிலோ, சாலையோரங்களிலோ... இப்படி தூய்மையற்று இருந்தாலும் ஆபத்தே. எனவே, அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களிடமும் சிநேகத்துடன் விஷயத்தை எடுத்துவைத்து, அவர்களை விழிப்படையச் செய்வதும் நம்பொறுப்பே!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick