நமக்குள்ளே!

ரியலூர் அனிதா... மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்த இந்த இளம் மலர், கனவு கைகூடாத நிலையில் தன்னுடைய கதையையே முடித்துக்கொண்டுவிட்டது. தமிழகம் முழுக்கவே மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது அனிதாவின் தற்கொலை.

இதற்குப் பின்னால் இருக்கும் வலி, அனிதாவுக்கு மட்டுமேயானது அல்ல... தமிழகப் பாடத் திட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பைப் படித்து முடித்த லட்சக்கணக்கான மாணவர்களின் வலி; அவர்களைப் படிக்க வைத்துக்கொண்டிருக்கும் பெற்றோர்களின் வலி; வழக்கம்போல, ‘தற்கொலை தீர்வல்ல’ என்ற ஒற்றை வரியோடு கடந்து செல்ல முடியாத வலி!

சுயநல அரசியல்வாதிகளும், கல்வி வள்ளல்களும் கோலோச்சும் இந்த நாட்டில், படிப்பு என்பதே பெரும்பாடாகத்தான் இருக்கிறது பல்லாண்டுகளாக. அதிலும் தமிழகத்தின் நிலை, ஒவ்வோர் ஆண்டும் பரிதாபமே!
‘இந்த ஆண்டு நுழைவுத் தேர்வு உண்டு’, ‘சமச்சீர் கல்வி அறிமுகம்’, ‘இல்லையில்லை, சமச்சீர் கல்வியை அமல்படுத்தவே மாட்டோம்’, ‘மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு இந்த ஆண்டு தமிழகத்துக்குக் கிடையாது’, ‘எங்கள் பள்ளியில் சேர்ந்தால் நீட் தேர்வுக்கு கோச்சிங் உண்டு. ஜஸ்ட் மூன்று லட்சம்தான் கட்டணம்’

- இப்படித்தான் தமிழகத்தின் கல்வி, தரமற்றவர்கள் மற்றும் தகுதியற்றவர்களின் கைகளில் சிக்கி, பல்லாண்டுகளாகப் பரிதவிக்கிறது.

இதற்கிடையில், ‘இந்தியா முழுக்க ஒரே கல்வி’ என்கிற கோஷத்துடன் சீறிக்கொண்டு புறப்பட்ட மத்திய அரசு, நீட் தேர்வைக் கட்டாயமாக்கிவிட்டது. ‘தமிழக மாணவர்களின் கல்வி முறை வேறு. எனவே, நீட் என்கிற பெயரில் ஒரேவிதமான தேர்வை அதிரடியாகப் புகுத்த முடியாது. எங்கள் மாணவர்களின் நலனையும் கருத்தில்கொண்டே முடிவெடுக்க வேண்டும்’ என்று குறைந்தபட்சம் ஆலோசனை சொல்லவோ, கால அவகாசம் கேட்டுப் பெறவோ துணிவில்லாத முதல்வரும் அரசாங்கமும், உறுதியாக எதிர்த்து நின்று போராடாத எதிர்க்கட்சிகளும் வாய்த்தது... தமிழக மாணவர்கள் செய்த பாவம் போல.

கூலித் தொழிலாளியின் மகளாக இருந்தும், ப்ளஸ் டூ-வில் 1,176 மதிப்பெண் எடுத்த அனிதாவால், நீட் நுழைவுத் தேர்வில் வெல்ல முடியவில்லை. உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடியும் பலனில்லை. இன்று அனிதாவும் இல்லை.

கல்வியைக் கடைச்சரக்காக மாற்றிக்கொண்டிருப்பவர்களுக்குத் துணைபோகும் மத்திய மற்றும் மாநில அரசுகளும் அரசியல்வாதிகளும் இருக்கும்வரை... அனிதாக்கள் மட்டுமல்ல, கல்வியே இனி மெள்ளச் சாகும்.

உரிமையுடன்,

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick