நமக்குள்ளே!

‘ஒரு தைரியமான சாகசம்தான் வாழ்க்கை... வேறெதுவும் இல்லை.’

- காதல் கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் தன் முகநூல் பக்கத்தில் திவ்யா விபின் பகிர்ந்திருக்கும் வார்த்தைகள் இவை. ஆனால், ஒரு சாகசப் பயணமே இந்த ஜோடியின் உயிரைப் பறித்து, அவர்களின் சாகசக் கனவுகளையும் பொசுக்கிவிட்டது. குரங்கணி மலையில் பற்றிக்கொண்ட காட்டுத் தீயில் சிக்கி இவர்களைப்போல பல இளைஞர்கள் உயிரை இழந்துள்ளனர். கனவு மற்றும் எதிர்காலம் சாம்பலாகிப்போன இளைஞர்களும் உண்டு. இதுவரை 16 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 11 பேர் பெண்கள். இன்னும் பலர் கடுமையான தீக்காயங்களுடன் உயிர்ப்போராட்டம் நடத்திக்கொண்டுள்ளனர். அவர்களிலும் பெரும்பான்மையானவர்கள் பெண்களே!
 
இதில் சிக்கி உயிரிழந்திருக்கும் திவ்யா-விவேக் மற்றும் திவ்யா-விபின் ஜோடிகளின் கதை, காட்டுத் தீயையும் கண்ணீர்விட வைத்துவிடும். அண்மையில் திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடிகள், காடுகளின் மீதும் அதீத காதல்கொண்டவர்கள். அவர்களுடைய முகநூல் பக்கங்கள் முழுக்க, பயண புகைப்படங்களும் வாசகங்களும் நிறைந்திருப்பதே இதற்கு சாட்சி.

பயணம், சாகசம் எனப் புதிய களங்களில் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரத் தொடங்கி யிருக்கிறார்கள் பெண்கள். இந்தச் சூழலில் நிகழ்ந்திருக்கிறது இவ்விபத்து... ‘அட்வென்ச்சர் விளையாட்டுகள் என்பவை தேவையே இல்லை; பெண்கள் வீடுகளை விட்டுப் பயணம், சாகசம் என்று வெளியேறினால் இப்படித்தான்...’ என்றெல்லாம் ஆதங்கப்படுவதுபோல அடிப்படைவாத எண்ணங்களை வெளிப்படுத்த ஆரம்பித்துவிட்டனர் பலரும்.

பேருந்துகளிலும் ரயில்களிலும் பூங்காக்களிலும், ‘பொண்ணுங்களுக்கு ஏன் இந்த வேலை. பசங்கன்னா தப்பிச்சுடுவானுங்களே’ என்று பேசுபவர்களை வேறு எப்படிப் புரிந்துகொள்ள முடியும்!

ஆனால், இத்தகையோரைக் கண்டு பயங்கொள்ளல் ஆகாது. அதேநேரம், வீரத்தைவிட விவேகத்தை முன்னிறுத்தத் தயங்கக் கூடாது. தண்ணீரைப் பார்த்ததுமே குதிப்பது; பச்சை மலையைப் பார்த்ததுமே சரசரவென ஏற ஆரம்பிப்பது என்பதெல்லாம் அசட்டுத்துணிச்சலாகவே முடியக்கூடும். ட்ரெக்கிங் செல்ல முறையான அனுமதி பெற்று, அனுமதிக்கப்பட்ட பகுதிகளில்தான் செல்கிறோமா; காடு மற்றும் வனவிலங்குகளை எதிர்கொள்வதற்குத் தேவையான வலிமையுடன்தான் செல்கிறோமா; இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளத் தேவையான ஆயத்தங்களுடன்தான் செல்கிறோமா என்பதையெல்லாம் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

உயிர், விலை மதிப்பற்றது. அதை சாகசத்துக்கு விலையாகக் கொடுப்பது சரியாக இருக்கவே முடியாது!

உரிமையுடன்,

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick