நமக்குள்ளே!

``கேள்விப்பட்டீங்களா, அந்த நாலாவது வீட்டுல பத்தாவது படிக்கிற பொண்ணு தூக்குல தொங்கிட்டா. அவங்க அம்மா எனக்கு ஃப்ரெண்டுதான். நாளைக்குக் கணக்குப் பரீட்சை. `நல்லா படி’னு சொல்லிட்டு, வேலைக்குப் போயிருக்காங்க. சாயங்காலம் வந்து பார்த்தா... இப்படி ஆகிப்போச்சி. `கண்டிச்சுக்கூட சொல்லலையே... படினுதானே சொன்னேன்’னு அவங்கம்மா அழறதைப் பார்க்கும்போது வேதனை தாங்கல...’’

- கிட்டத்தட்ட தானும் அழும் நிலையில் இப்படி ஆதங்கப்பட்டார் பக்கத்துவீட்டுத் தோழி. இவருக்கும் அந்த வயதில் ஒரு மகள் இருக்கிறாள் என்பதுதான் கூடுதல் அழுத்தத்துக்குக் காரணம்.

மகளைப் பறிகொடுத்தவர், பள்ளிக்கூடத்தில் பணியாற்றுபவர். அதே பள்ளியில்தான் மகளும் படிக்கிறார். பள்ளி இறுதித் தேர்வுக்காகப் படிப்பில் கவனம் செலுத்தாமல் விளையாடிக் கொண்டிருப்பதாக மகளிடம் கொஞ்சம் கடிந்துகொண்டிருக்கிறார். அக்கம்பக்கத்திலிருக்கும் சம வயதுக் குழந்தைகளோடு ஒப்பிட்டுப் பேசிவிட்டுப் பணிக்குச் சென்றிருக்கிறார். மனஅழுத்தத்துக்கு ஆளான மகள், தனிமையிலிருக்கவே வாழ்வையே முடித்துக்கொண்டுவிட்டாள்.

`படினு கண்டிச்சு சொல்றது ஒரு குற்றமா; அவர்களுடைய எதிர்காலத்துக்காகத்தானே இப்படியெல்லாம் கோபப்படுகிறோம்.’
 
- குழந்தைகளைக் கண்டிப்பதை இப்படியெல்லாம் நாம் நியாயப்படுத்தத் தவறுவதே இல்லை. உண்மையில் இவை மட்டும்தான் காரணமா?

தெரிந்தோ தெரியாமலோ... படிப்பு, தேர்வு, வேலை என்று எல்லா விஷயங்களிலும் அளவுக்கு அதிகமாகக் கவலைப்படவேண்டிய நிலைக்கு இந்த உலகம் தள்ளப்பட்டிருக்கிறது. நுகர்வு கலாசார மனப்பான்மை நம்மையெல்லாம் ஒரு புள்ளியில் இணைத்துவைத்துப் பொம்மலாட்டம் நடத்திக்கொண்டிருக்கிறது. இதனால் பெற்றோருக்கு ஏற்படும் மனஅழுத்தத்தை, `குழந்தைகளின் எதிர்காலம் என்ன ஆகுமோ’ என்கிற கவலையுடன் சேர்த்துக் கலந்து, ஒட்டுமொத்தமாகக் குழந்தைகள்மீது திணிப்பதை நாம் மறுக்க முடியுமா? குழந்தைகளுக்குக் கல்வி அவசியம்தான். உயிர், அதைவிட முக்கியம் என்பதை உணர்ந்திருக்கிறோமா?

நொடி நேரக் கோபத்தில் எதையோ பேசுவதும் குழந்தைகளிடம் கடுமையாக நடந்துகொள்வதும் வாடிக்கைதான். ஆனால், குழம்பிய நிலையில் இருக்கும் குழந்தையை, அதன் மனக்கலக்கத்தைத் தீர்த்து வைக்காமலேயே தனியே விட்டுவிடுவது ஆபத்தில்லையா?

என்னதான் ‘போட்டிகள் நிறைந்த உலகம்’, ‘சர்வைவல்’ என்று சாக்குகளைச் சொன்னாலும், முதல் மதிப்பெண்... முதல் இடம் இதெல்லாம் மட்டுமே வாழ்க்கையைச் சிறக்க வைத்துவிடுமா? அதையும் தாண்டி ‘ஸ்ட்ரீட் ஸ்மார்ட்னஸ்’ எனச் சுதாரிப்பாக வாழ்வது, ‘அவுட் ஆஃப் தி பாக்ஸ் திங்கிங்’ என வித்தியாசமாக யோசிப்பது, விடாமுயற்சி என நிறைய காரணிகள் இருக்கின்றன. முதல் மதிப்பெண்ணே எடுத்திருந்தாலும், உழைப்பிலும் விடாமுயற்சியிலும் மனதுக்குப் பிடித்ததைச் செய்வதிலும்தான் வெற்றி இருக்கிறது. அதேபோல எந்தத் தோல்வியையும் சமாளித்து எழுந்து நிற்பதும் வெற்றியே!

சிறகு விரித்து உயரப் பறக்கவேண்டிய பறவைகள்தான் குழந்தைகள்... கொட்டடிக்குள் அடைத்து வைக்கப்படும் பிராய்லர் கோழிகள் அல்ல என்பதை உணர்வோம்!

உரிமையுடன்,

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick