நமக்குள்ளே...

டெல்லியில் நிர்பயாவுக்கு நிகழ்ந்த பயங்கரம் இப்போது நினைத்தாலும்கூட நடுக்கத்தை உருவாக்குகிறது. இந்த நிலையில், சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த காதுகேளாத 12 வயது சிறுமிக்கு நிகழ்த்தப்பட்டிருக்கும் கொடுமை... சப்த நாடிகளையும் ஒடுங்க வைக்கிறது.

தன்னுடைய குடியிருப்பில் வெகுளியாக வலம்வந்துகொண்டிருந்த அந்தப் பிஞ்சு மலரைப் பார்த்ததுமே... கொஞ்சி விளையாடி, அவளுடைய குறை தெரியாமல் வளர்த்தெடுக்கத்தான் அனைவருக்குமே தோன்றும். ஆனால், அதே குடியிருப்பில் பலவித வேலைகளைப் பார்க்கும் மனிதத் தன்மையற்ற கொடூரர்கள்... போதை ஊசி போட்டும், மாத்திரைகள் கொடுத்தும் தொடர்ச்சியாக ஏழு மாதங்கள் பாலியல் வன்கொடுமை செய்திருப்பது, உலகில் எங்குமே நடந்திராத கொடுமை. பதினெட்டுக்கும் மேற்பட்ட அந்தக் கொடூரன்களின் செயல், நாமெல்லாம் மனித சமூகம் என்று சொல்லிக்கொள்வதற்கே வெட்கப்பட வைக்கிறது.

சட்டங்களை நீட்டுவதாலும், வீதிகளில் இறங்கிப் போராடுவதாலும் மட்டுமே இத்தகைய கொடுமைகளுக்கெல்லாம் முடிவு கட்ட முடியவில்லை என்பதே நிதர்சனம். தொடர்ந்துகொண்டிருக்கும் சம்பவங்களும் இதைத்தான் உறுதிப்படுத்துகின்றன. இதற்கெதிரான போராட்டம்... ஒவ்வொரு வீட்டுக்குள்ளிருந்தும் தொடங்கப்பட வேண்டும் என்பதே உண்மை.

எத்தனை வீடுகளில் ‘குட் டச், பேட் டச்’ என்பதைக் குழந்தைகளுக்குச் சொல்லித் தருகிறோம்? பெண்களின் உடல் சார்ந்த உபாதைகளை, ஆண் குழந்தைகளிடம் விவாதிக்கும் பெற்றோர் எத்தனை பேர்? பெண் குழந்தைகளையும், பெண்களையும் பற்றி ஆண் குழந்தைகளுக்குத் தெளிவை ஏற்படுத்தும் பள்ளிக்கூடங்கள் இங்கே இருக்கின்றனவா?

இப்போதுதான் தட்டுத்தடுமாறி மேலெழுந்து வந்துகொண்டிருக்கிறது பெண் சமூகம். இந்த நிலையில், இதுபோன்ற கொடுமைகள் எல்லாம் அதிகரிக்க ஆரம்பித்தால், பழையபடி பெண் குழந்தைகளை வீட்டுக்குள் முடக்கும் எண்ணம்தான் வெகுவாக வேரிடும். ஆனால், வேடிக்கை மனிதரைப் போல் வீழ்வேனென்று நினைத்தாயோ என்பதை இந்தச் சமூகத்துக்கு வீரியமாக எடுத்துரைக்கும் வகையில், விவேகமாகச் செயல்பட வேண்டிய தருணமிது.

பாலியல் கல்வியை, தவறான தொடுதல் பற்றிய அறிவை நம் வீட்டு வரவேற்பறையில் இருந்தே ஆரம்பிப்போம்; குழந்தைகளுடன் ‘குவாலிட்டி டைம்’ என்கிற பொன்னான நேரத்தைச் செலவிடுவதை முக்கியம் என்று உணர்வோம்; தேவையற்ற பாலியல் வக்கிரங்களைத் தூண்டும் சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தவிர்ப்போம்; உடைத்துப் பேசுவோம், குழந்தைகளிடம் ஆண் பால், பெண் பால்... அன்பால்!

உரிமையுடன்,

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்