ஒரு வெள்ளை காதல்! - ஃபேனி பார்க்ஸ்

ஒரு பயணம் ஓர் அனுபவம் ஒரு வெளிச்சம்மருதன்

இந்தியா எப்படி பிரிட்டனின் காலனி நாடாக மாறியது என்பது குறித்தும், ஆதிக்கத்தை உடைத்தெறிந்து எப்படி இந்தியா தன்னை விடுவித்துக்கொண்டது என்பது குறித்தும் எண்ணற்றப் பதிவுகள் வெளிவந்துவிட்டன. ஆனால், பிரிட்டனும் இந்தியாவும் எப்படி ஒன்றோடொன்று உரையாடிக்கொண்டன; அந்த உரையாடல் எத்தகைய மாற்றங்களை இரு நாடுகளைச் சேர்ந்தவர்களிடத்தில் ஏற்படுத்தின என்பது விரிவாக விவாதிக்கப்படவில்லை. ஃபேனி பார்க்ஸ், முக்கியமான ஓர் எழுத்தாளராக உயர்வது இந்த இடத்தில்தான். பிரிட்டனும் இந்தியாவும் உரையாடிக்கொண்டதை அருகில் இருந்து கேட்டு எழுதியவர் அவர். காதுகளை மட்டுமல்ல; மனதையும் திறந்துவைத்துக்கொண்டு அவர் செய்துள்ள பதிவு, நேர்மையானது; அசாத்தியமானது.

ஃபிரான்செஸ் சூஸன்னா ஆர்ச்சர் எனும் ஃபேனி, 1794 டிசம்பர் 8 அன்று வடக்கு வேல்ஸ் பகுதியில் பிறந்தார். `அழகான, திறமையான பெண்’ என வர்ணிக்கப்பட்ட ஃபேனி, 27-வது வயதில் சார்லஸ் கிராஃபோர்ட் பார்க்ஸைத் திருமணம் செய்துகொண்டார். சார்லஸுக்குக் கிழக்கிந்திய கம்பெனியில் எழுத்தராகப் பணி நியமனம் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, நவம்பர் 1822-ல் இருவரும் கொல்கத்தா வந்தடைந்தனர். நிறுத்தங்கள் ஏதுமின்றி ஐந்தரை மாதங்கள் தொடர்ந்து சென்று களைப்பூட்டும் கப்பல் பயணம் அது.

முதல் பார்வையிலேயே இந்தியாவைக் காதலிக்கத் தொடங்கிவிட்டார் ஃபேனி. `இங்கு நிலவும் மிதமான குளிர் என்னை ஈர்த்துவிட்டது. இதைவிட மகிழ்ச்சியளிக்கக்கூடிய இன்னொரு நாடு இந்த உலகில் இருக்கிறதா?’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!