நமக்குள்ளே... | Editorial Page - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/11/2018)

நமக்குள்ளே...

ட்டுக்கோட்டையை அடுத்த அணைக்காடு கிராமத்தைச் சேர்ந்த பதினான்கு வயது சிறுமி விஜயலட்சுமி. பூப்பெய்திய அவளை, வீட்டுக்கு அருகில் உள்ள குடிசையொன்றில் தங்கவைத்தனர். நவம்பர் 15-ம் தேதி, அவளுக்கு மூன்றாம் நாள். நள்ளிரவு நேரத்தில் கஜா ஆடிய ஊழித்தாண்டவம், அவளை நடுநடுங்க வைத்தது. பயத்தில் கதறித்துடித்த சிறுமியை ஆறுதல் சொல்லி தூங்கவைத்தனர் அம்மாவும் பாட்டியும். ஆனால், அசுர வேகமெடுத்த கஜா, வேரோடு சரித்த தென்னைகளில் ஒன்று குடிசைமீது விழுந்து நொறுக்க... சிறுமி விஜயலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.

‘வீட்டுக்கு விலக்கு’ என்று கூறி, சின்னஞ்சிறு பெண்களைத் தனிமைப்படுத்தும் கொடுமை இந்தக் காலத்திலும் தொடர்வது, கஜா ரூபத்தில் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. கிராமங்களில்தான் என்றில்லை... நகர்ப்புறங்களிலும் தனி அறை, வெறும் தரையில் படுக்கை, பக்கத்தில் செருப்பு, உலக்கை என எதையாவது வைத்துக்கொள்ளுதல் என்று வயதுக்குவந்த பெண்களுக்கு எதிரான கொடுமை தொடரத்தான் செய்கிறது. முந்தின நிமிடம்வரை வீதியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை, அடுத்த நிமிடத்திலேயே ‘பெரிய மனுஷி’ என்றாக்கிவிடுகிறோம். இத்தகைய சிறுமிகளை ஃப்ளாட் எனப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளின் பால்கனியில் தூங்கவைக்கும் கொடுமையும் நடக்கிறது!

ஒரு பெண்ணின் உடலில் நடக்கும் சாதாரண ஹார்மோன் சுழற்சிக்கு ஏன் இத்தனை தப்பான கற்பிதங்கள்? மாதவிலக்கு நாள்களில் உடல்வலி, என்னவென்று புரியாத குழப்பம், பயம் என்று நொந்திருக்கும் சிறுமிகளை, மேலும் வருத்துவது எப்படி சரியாகும்? `தீட்டு’, `அசிங்கம்‘ என்று பெண்ணைப் பெற்ற, பெண்ணின் உடல்மொழி அறிந்த, பெற்ற தாயே தனிமைப்படுத்துவது தவறில்லையா?

‘மாதவிடாய் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மிகச்சாதாரணமாக நடக்கும் உயிரியல் சுழற்சி மட்டுமே. அதை அழுக்கென்றும், தீட்டென்றும் எண்ண எதுவுமில்லை’ என்கிற தெளிவை நாம் ஏற்படுத்திக்கொண்டால்தான், நல்லதொரு சமுதாயத்தை வளர்த்தெடுக்க முடியும்.

இனியாகிலும் மூடநம்பிக்கைகளை மூட்டைக்கட்டுவோம், நம்வீட்டு ராசாத்திகள் என்றும்போல் நம்முடனே உறங்க உரிய இடம்கொடுப்போம். அச்சத்தில் இருக்கும் குழந்தைகளின் கைகளை ஆதரவாகப் பற்றுவோம்.

உரிமையுடன்,

[X] Close

[X] Close