நமக்குள்ளே

சென்னை பெண்கள் விடுதி ஒன்றில் ரகசிய கேமரா கொண்டு பெண்களைப் படம்பிடித்த விடுதி உரிமையாளர் கைதான சம்பவம் நாடு முழுக்கப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆதம்பாக்கத்தில் லேடீஸ் ஹாஸ்டல்  நடத்திவந்த சம்பத் என்பவர், விடுதியின் படுக்கையறைகள் மற்றும் குளியலறைகளில் ரகசிய கேமராக்களைப் பொருத்தி, அங்கு தங்கியிருந்த பெண்களைப் படம்பிடித்திருக்கிறார். ஒரு பெண், அறைகளில் எந்த பிளக் பாயின்ட்டும் வேலை செய்யாத காரணத்தை அறிய முற்பட்டபோதுதான் விபரீதம் தெரிந்திருக்கிறது. பிளக் பாயின்ட்டுக்குள் சமர்த்தாக இருந்திருக்கிறது சின்னஞ்சிறிய கேமரா. மிரண்டுபோன பெண்கள், போலீசில் புகார் தர, ஹாஸ்டலுக்குள் நுழைந்த போலீசாருக்கு அதிர்ச்சி. மின்சாதன சாக்கெட் முதல் ஹேங்கர் வரை எல்லாவற்றிலும் ரகசிய கேமராக்கள்.

படிப்புக்குத் தகுந்த வேலை பெருநகரங்களில் மட்டுமே கிடைப்பதால், தமிழகத்தின் கடைக்கோடியில் இருந்தும்கூட பெண்கள் சென்னை போன்ற பெருநகரங்களுக்கு வந்தவண்ணம் உள்ளனர். பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு கருதி, பெரும்பாலும் பெற்றோர் அவர்களைத் தனி வீடுகள் எடுத்துத் தங்க அனுமதிப்பதில்லை. இதுபோன்ற நடுத்தர வர்க்கத்துக்குக் கைகொடுப்பது சென்னையில் புற்றீசல்போலக் கிளம்பியிருக்கும் வொர்க்கிங் உமன்ஸ் ஹாஸ்டல்கள்தாம். ஏசி தனி அறை முதல் கூட்டமாகத் தங்கும் டார்மிட்டரி வரை நம் வசதிக்கேற்ப தெருவுக்குத் தெரு ஹாஸ்டல்கள் இருப்பது மகிழ்ச்சிதான். அவை பாதுகாப்பானவையா என்பதுதான் இப்போது பெரிய கேள்விக்குறி.

கைது சம்பவம் நடந்த பிறகு, ஹாஸ்டல்களில் தங்கும் பெண்கள் மற்றும் ஹாஸ்டல் உரிமையாளர்களுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிவுறுத்தியிருக்கிறார் சென்னை ஆட்சியர். நகரில் ஹாஸ்டல்கள் நடத்துவதற்கான உரிமத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து ஹாஸ்டல்களும் பெற்றுக்கொள்ள வேண்டும்; மறைந்திருக்கும் கேமராக்களைக் கண்டுபிடிக்கும் செயலிகளைப் பெண்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் ஆகிய அறிவுறுத்தல்கள் அதில் இருக்கின்றன.

சென்னை நகரம் முழுவதும் அங்கீகாரம் இல்லாத 2,000 ஹாஸ்டல்கள் இருக்கின்றன. அத்தனையையும் அங்கீகரித்து, உடனடியாகக் கண்காணிப்பது என்பது நம் அரசு இயந்திரத்துக்கு சாத்தியமற்ற ஒன்றே. பெற்றோரும் பெண்களும் தாமாகவே முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்வது நல்லது.

மறைந்திருக்கும் கேமராக்களைக் கண்டுபிடிக்கும் `ஹிடன் கேமரா டிடெக்டர், ஸ்பை கேமரா டிடெக்டர், ஹிடன் கேமரா ஃபௌண்டர், ஹிடன் கேமரா ஸ்பை, டைனி ஸ்பை ஹிடன் கேமரா ஃபைண்டர்’ போன்ற செயலிகளை ஸ்மார்ட் போன்களில் பதிவிறக்கம் செய்து அவ்வப்போது தங்கியிருக்கும் அறைகளைச் சோதித்துப் பார்ப்பது நல்லது. தேவையற்ற இடத்தில் தேவையற்ற பொருள்கள் இருப்பதைக் கவனிக்க வேண்டும். டூ-வே மிரர் எனப்படும் இரட்டை வழிக் கண்ணாடிகள் உள்ளனவா என்று கண்டறிய வேண்டும். அறைகளை முழுக்க இருட்டாக்கிய பின்பும், எங்காவது வெள்ளை அல்லது சிவப்பு ஒளி தெரிகிறதா என்று பார்க்க வேண்டும். சாக்கெட்டுகள், ஹேங்கர்கள், விளக்குகள் என்று எல்லாவற்றின் மீதும் ஒரு கண் இருக்கட்டும். அமைதியான அறைக்குள் கேமரா இயங்கும் சன்னமான ரீங்கார ஒலி கேட்டாலும், உஷாராவது அவசியம்.

பெற்றோரும் அனுமதி பெற்ற விடுதியா, விடுதியில் சிசிடிவி கேமரா இருக்கிறதா, மேற்பார்வை செய்பவர் யார், என்னென்ன பணிக்கு ஹாஸ்டலுக்குள் ஆண்கள் நுழைகிறார்கள், பெண் பாதுகாவலர் இருக்கிறாரா என்பவற்றைச் சோதித்து அறிந்த பிறகே உங்கள் பெண் பிள்ளைகள் அங்கு தங்க அனுமதியுங்கள். புதிதாக நகரத்தில் நுழையும்போது கிராமத்துப் பெண்களுக்கு மட்டற்ற சுதந்திர உணர்வை அது தருகிறது. தங்கும் இடத்தை முடிவு செய்வது முதலான தங்கள் முடிவுகளைத் தாங்களே எடுக்கும் மன வலிமையையும் தருகிறது. ஆனால், கொஞ்சமே கொஞ்சம் பெற்றோரையும் ஆலோசித்து, நாமும் சிறிது எச்சரிக்கையுணர்வுடன் இருந்தால், பாதுகாப்பாக இருக்கலாம்தானே?

உரிமையுடன்,

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick