நமக்குள்ளே!

‘ஆண்டாள் பிறந்த குலம் பற்றிய ஆராய்ச்சி முடிவு’ என வாய்திறந்தார் கவிஞர் வைரமுத்து.

அவ்வளவுதான்... கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வாதப்பிரதிவாதங்கள் கொதிக்கின்றன தமிழகத்தில்.

ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்று கூறப்படும், பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாளைப் பற்றிய இத்தகைய ஆராய்ச்சி, இப்போது எதற்கு என்று தெரியவில்லை. மேலும், பெண்குலத்துக்கோ, இந்த பூமிக்கோ இந்த ஆராய்ச்சி என்ன நன்மையைக் கொண்டுவந்து சேர்க்கப்போகிறது என்றும் தெரியவில்லை.

‘ஆண்டாள் எங்களின் தெய்வம்... அவரை எப்படி அவமதிக்கலாம்?’ என்று கொதித்தெழுந்திருக்கிறார்கள் பலரும். நியாயம்தான். ஆண்டாளை தெய்வமாக வணங்குபவர்கள் இப்படி அதிரவில்லை என்றால்தான் ஆச்சர்யம். ஆனால், அவர்களுக்குத் துணையாகப் போர்க்குரல் கொடுக்கிறேன் என்று இறங்கிய சிலர், ஆராய்ச்சிக் கருத்தைக் கையாண்ட வைரமுத்துவிடம் மட்டும் மோதாமல்... அவருடைய குடும்பத்தையும் வீட்டுப் பெண்களையும் வீதிக்கு இழுப்பது என்ன நியாயம்? உடனே, வைரமுத்துவுக்கு ஆதரவானவர்கள் எனச் சொல்லிக் களமிறங்கியிருப்பவர்கள், எதிர்த்தரப்புக் குடும்பத்தினரையும் பெண்களையும் பதிலுக்குக் கேவலப்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

இதேபோல ‘பத்மாவத்’ என்கிற திரைப்படமும் வடஇந்தியாவில் தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ராஜபுத்ர வம்சத்தவர்களால் போற்றப்படும் ராணியை, முகலாய மன்னன் அலாவுதீன் கில்ஜியுடன் சேர்த்துத் தவறாகச் சித்திரித்துள்ளனர் என்று படத்துக்கு எதிராகப் போர்க்குரல் எழுப்பியுள்ளனர் அங்கே.

ஆகமொத்தத்தில், இதுபோன்ற சண்டைகளில் எல்லாம் காயப்படுத்தப்படுவதும், பாதிக்கப்படுவதும் பெண்குலமே.

இப்படிக் கிளம்பி நிற்கும் பிரச்னைகள் எல்லாமே உண்மையிலேயே கவனம் ஈர்க்கவேண்டிய, பெண்கள் தொடர்பான மிக முக்கிய விஷயங்களிலிருந்து அனைவரையும் திசை திருப்பிவிடவே செய்கின்றன என்பதை எல்லோரும் உணர வேண்டும். பெண்களுக்கு எதிராக அதிகரித்துவரும் பாலியல் குற்றங்கள், சமூக ஊடகங்களில் பெண்கள்மீது கட்டவிழ்த்துவிடப்படும் வக்கிரங்கள் எனப் பேசுபொருளாக நம் மத்தியில் அதிக முக்கியத்துவம் பெறவேண்டியவை எத்தனையோ இருக்கும்போது, தேவையற்ற பழங்கதைகளைத் தோண்டிக்கொண்டே இருப்பது இனியும் தொடரத்தான் வேண்டுமா என்றும் யோசிக்க வேண்டும்.

‘பின்னோக்கிய பார்வையில் நாம் வீணடிக்கும் ஒவ்வொரு கணமும், முன்னோக்கிய நம் பயணத்தைத் தாமதப்படுத்துகிறது.’ - அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலரி கிளின்டன் சொல்லியிருக்கும் வார்த்தைகள்தாம் எவ்வளவு உண்மை!

உரிமையுடன்,

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick