அதென்ன ஃபைப்ராய்ட்ஸ்?

பெண் நலம்

ஃபைப்ராய்ட்ஸ் என்ற பெயரைப் பரவலாகக் கேள்விப்படுகிறோம். இந்தப் பிரச்னை ஏன் வருகிறது?

- ஆர்.ஸ்வேதா, திருச்சி-5


விளக்கம் அளிக்கிறார் மகப்பேறு மருத்துவர் நிவேதிதா...

சில பிரச்னைகள் இளவயதுப் பெண்களைப் பாதிக்கும். இன்னும் சில நடுத்தர வயதுப் பெண்களையும், வேறு சில மெனோபாஸ் கட்டத்தில் இருப்பவர்களையும் பாதிக்கும். ஃபைப்ராய்ட்ஸ் எந்த பேதமும் பார்ப்பதில்லை. பூப்படைந்த சிறுமி முதல் மெனோபாஸை நெருங்கிக்கொண்டிருப்பவர் வரை வயது வித்தியாசமின்றி, யாரை வேண்டுமானாலும் தாக்கக்கூடியது.

ஃபைப்ராய்ட்ஸ், மயோமா இரண்டுமே ஒன்றுதான். அதாவது கர்ப்பப்பை கட்டி. குழந்தையின்மைக்கான காரணங்களில் ஃபைப்ராய்ட்ஸுக்கு முக்கியப் பங்குண்டு. மாதவிடாயின்போது, கர்ப்பப்பையின் உள்சுவர்தான் ரத்தப்போக்காக வெளியே வருகிறது. மாதவிடாய் காலம் முடிந்ததும், உதிர்ந்த உள்சுவரானது, புதிதாக வளர ஆரம்பிக்கும். இதுதான் நார்மலாக நடக்கும் விஷயம். உதிரவேண்டிய உள்சுவரானது, சிலருக்கு முழுமையாக வெளியேறாமல், தங்கிப்போகலாம். அதுதான் ‘எண்டோமெட்ரியோசிஸ்’ எனப்படுகிறது. அதாவது 75 சதவிகித உள்சுவர் லேயர் உதிர்ந்து, 25 சதவிகிதம் தங்கினாலும் இப்படி நடக்கலாம். ரத்தம் என்பது கிருமிகளைக் கவர்ந்திழுக்கிற ஒரு விஷயம். இப்படி மிச்சமிருக்கிற ரத்தத்தில் இன்ஃபெக் ஷன் உண்டாகி, வீங்கி, அதுவே ஃபைப்ராய்ட்ஸ் எனப்படுகிற கட்டிகளாக உருவெடுக்கலாம்.

மாதவிடாய் நாள்களில் மிகக்கடுமையான வலியும், வழக்கத்தைவிட அதிகமான ரத்தப்போக்கும்தான் இதன் முக்கிய அறிகுறிகள். வலி இருக்கும்போதே ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும். கட்டி இருப்பது உறுதியானால், முதல்கட்டமாக மருத்துவர், அதன் அளவைப் பார்த்து, மாத்திரைகள் தருவார். தாங்க முடியாத வலியையும், அதிகப்படியான ரத்தப்போக்கையும் அது கட்டுப்படுத்தும். வலியும் வேதனையும் சரியாகிவிட்டதே என அலட்சியமாக இருந்தால், நாளடைவில் கட்டி பெரிதாகலாம். கட்டியின் அளவு 10 செ.மீ-க்குள் இருந்தால், அதை லேப்ராஸ்கோப்பி சிகிச்சையிலேயே சுலபமாக அகற்றிவிடலாம். அதைவிடப் பெரிய கட்டி என்றால் அறுவை சிகிச்சை தேவைப்படும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick