நமக்குள்ளே!

பெண்களின் நம்பர் 1 தமிழ் இதழ் 11.4 லட்சம் வாசகர்கள்... இணைந்தோம்... உயர்ந்தோம்!

ருபதாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் உங்கள் அவள் விகடனின் மகுடத்தில் இன்னும் ஒரு வைரக்கல். ஆம்... தமிழின் நம்பர் 1 மாதம் இருமுறை இதழ் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது அவள் விகடன். பெண்களின் நம்பர் 1 தமிழ் இதழ் என்ற சிறப்பையும் கூடுதலாகச் சேர்த்துக்கொண்டு, உங்கள் கரங்களில் ஜொலிக்கிறது அவள் விகடன். ‘இந்தியன் ரீடர்ஷிப் சர்வே 2017’ முடிவுகளின்படி கிடைத்திருக்கும் ஆனந்த அங்கீகாரம் இது.

ஓவ்வோர் ஆண்டும் வாசகர்களிடையே சர்வே நடத்தி, இந்தியப் பத்திரிகைகளின் வாசகர் பலத்தை மதிப்பிடும் நிறுவனம்தான் ஐ.ஆர்.எஸ். கடந்த 2014-ம் ஆண்டு வெளியிட்ட சர்வே முடிவுகள் தொடர்பாக பலத்த சந்தேகங்கள் கிளப்பப்படவே, மூன்று ஆண்டுகளாக சர்வே நடத்தப்படவில்லை. தற்போது, ஆய்வுப்பணிகளில் மாற்றங்களைச் செய்துகொண்டு, துல்லியத்தன்மையைக் கொண்டுவரும் வகையில் களமிறங்கிய அந்த நிறுவனம், முன்னெப்போதும் இல்லாத வகையில் 3.2 லட்சம் வாசகர்களிடையே ஆய்வுநடத்தி, முடிவுகளை வெளியிட்டுள்ளது. எப்போதுமே அவள் விகடன்தான் தமிழ்க் குடும்பங்களின் தலைமகள். ஆய்வுகளின் அடிப்படையிலும் அது அழுத்திச் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தப் பெருமைமிகு தருணத்துக்கு 11 லட்சத்து 4 ஆயிரம் வாசகர்கள்தாம் முழு முதற்காரணம். நீங்கள் காட்டும் ப்ரியமே, உந்துசக்தியாக எங்களை இயக்கிக்கொண்டிருக்கிறது.

தாய்க்கு மகளாகவும், மகளுக்குத் தாயாகவும் உங்களோடு இணைந்த நீண்ட பயணம் இது. மேன்மேலும் வெற்றிப்பாதையில் சேர்ந்தே தொடர்ந்து பயணிக்கவிருக்கிறோம் நாம். இந்த இனிய தருணத்தில் சில உறுதிமொழிகளையும் நாங்கள் ஏற்கிறோம். உங்களுக்கும் குடும்பத்துக்கும் தொழில், வேலை என்று பயனளிக்கக்கூடிய ஏராளமான புதிய விஷயங்களையும் உங்களின் தேவைகளுக்கேற்ற பயனுள்ள தகவல்களையும் இனிமையாக, எளிமையாக உங்களிடம் கொண்டு சேர்ப்போம். புதுமைப் பெண்களின் வெற்றிக்குரலாக, சாதனைப் பெண்களின் முழக்கமாக, உழைக்கும் பெண்களுக்கு அங்கீகாரமாக ஒவ்வோர் இதழும் உங்கள் கைகளில் புத்தம்புதுப் பூவாக மலரும்.

பத்திரிகை என்பதோடு நில்லாமல்... மகத்தான சாதனைகளைப் படைத்துக்கொண்டிருக்கும் அறிந்த முகங்கள், அறியாத முகங்கள் என வெற்றிப் பெண்களோடு கைகோக்கிற அழகான நிகழ்வுகளை நோக்கியும் நகர்ந்துகொண்டிருக்கிறாள் உங்களின் அவள் விகடன்.

உறுதிகொண்ட நெஞ்சோடு ஆக்கபூர்வமாகச் செயல்பட எங்களுக்கு உற்சாகம் அளித்துக் கொண்டிருக்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் எங்களின் அன்பும் நன்றியும்.

உரிமையுடன்,

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick