நேசத்தைப் பாடுகிறேன்! - ஃபைரூஸ்

ஒரு பயணம் ஓர் அனுபவம் ஒரு வெளிச்சம்மருதன்

`நான் சிரியாவுக்குப் போகப்போகிறேன்' என்னும் ஃபைரூஸின் அறிவிப்பு லெபனானில் ஒரு குட்டிப் புயலையே ஏற்படுத்திவிட்டது. `ஃபைரூஸ் ஒரு தேவதை. அவருக்காக என் உயிரையே அளிப்பேன்' என்று உருகியவர்கள்கூட சீற்றத்துடன் வெடித்தார்கள்...

`இந்தப் பெண்ணுக்கு என்ன பைத்தியம் பிடித்துவிட்டதா? சிரியா நம் எதிரி நாடு என்று அவருக்குத் தெரியாதா? நம்மை வாட்டி வதைத்த ஒரு நாட்டுக்குச் செல்வேன் என்று எப்படி அவரால் சொல்ல முடிகிறது? நாட்டுப்பற்றுமிக்க ஒரு நேர்மையான பெண் என்றல்லவா ஃபைரூஸை இத்தனை காலமும் நினைத்துக்கொண்டிருந்தோம்? நாம் நினைத்ததைப்போல ஃபைரூஸ் ஒரு தேவதை கிடையாதா? எதிரியுடன் கைகுலுக்கிக்கொள்பவரைச் `சாத்தான்' என்றல்லவா அழைக்க வேண்டும்?'

ஆனால், ஃபைரூஸ் தன்னளவில் தெளிவாக இருந்தார். `இந்த உலகில் எனக்குத் தெரிந்தது ஒன்றுதான். இசை. என் இசைக்கு எதிரிகள் கிடையாது. எனவே, எனக்கும் எதிரிகள் இருக்க முடியாது.'

தீர்க்கமாகவும் துணிச்சலாகவும் தன் நிலைப்பாட்டை எடுத்துவைத்த ஃபைரூஸ் இளம்வயதில் மிகுந்த கூச்ச சுபாவம் கொண்டவராக இருந்திருக்கிறார். `எனக்குப் பள்ளிக்கூடத்தில் நண்பர்களே கிடையாது' என்கிறார். யாரைக்கண்டாலும் ஒதுங்கிச் சென்றுவிடுவாராம். சத்தம் போட்டுப் பேசி மகிழ்ந்தது பாட்டியிடம் மட்டும்தான். `எப்போது விடுமுறை வரும், எப்போது பாட்டி வீட்டுக்கு அழைத்துச் செல்வார்கள்?' என்று நகம் கடித்தபடி காத்திருப்பார்.  பள்ளியில் அமைதி காத்த உதடுகள் பாட்டியைக் கண்டவுடன் பரபரப்பாகிவிடும். `பாட்டி, பாட்டி' என்று அவர் பின்னாலேயே ஓடுவார்... `கடைக்குப் போகட்டுமா? வீட்டு வேலைகள் செய்யட்டுமா? வீட்டைத் துடைத்துப் பெருக்கட்டுமா?' பாட்டியின்மீது இத்தனை பாசத்தைக் கொட்டுவதற்கு ஒரு காரணம் இருந்தது. ஊர் சத்தம் அடங்கிய பிறகு அருகில் இழுத்து அமரவைத்து மெழுகுவத்தி ஒளியில் கண்கள் விரிய பாட்டி கதை சொல்ல ஆரம்பிப்பார். ஒன்று, அதற்குப் பிறகு இன்னொன்று என்று அடுக்கடுக்காகக் கதைகள் விரிந்துகொண்டே இருக்கும். பாட்டிக்கு எப்படியும் உறக்கம் வராது. பேத்திக்கு உறங்கவே தோணாது. `சே, இந்த விடியலுக்கு அப்படி என்னதான் அவசரமோ' என்று கடுகடுப்பார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick