நமக்குள்ளே!

டுமலைப்பேட்டை வீதியில் பட்டப்பகலில் கொலைவெறியோடு துரத்திய கும்பல், காதல் கணவரின் உயிரைப் பறித்தெடுக்க, குற்றுயிரும் குலையுயிருமாக மீண்ட கௌசல்யா... இதோ நிமிர்ந்து நடைபோடுகிறார். மனோரீதியான, சாதிரீதியான, பாலினரீதியிலான தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டபோதும் துளியும் சோர்ந்துவிடவில்லை. சட்டப்போராட்டம் நடத்தி, தன் தந்தை உட்பட கொலைகாரர்களுக்குத் தூக்குத் தண்டனை வரை வாங்கிக் கொடுத்திருக்கிறார். தண்டனையிலிருந்து தப்பிய தாய் உள்ளிட்டோருக்கும் தண்டனையைப் பெற்றுத் தராமல் ஓய்வதில்லை என்றும் சூளுரைத்திருக்கிறார்.

கௌசல்யாவின் போராட்டத்தைத் தனிப்பட்ட ஒரு பெண்ணின் போராட்டமாகப் பார்க்கவே முடியாது. சாதி மறுப்புத் திருமணங்களைச் செய்துகொண்டதால் கொல்லப்பட்ட எத்தனையோ காதலர்களுக்கும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு எங்கோ வாழ்ந்துகொண்டிருக்கும் காதல் தம்பதிகளுக்கும் நீதி கேட்கும் போராட்டமே இது!

ஆணவக் கொலை என்று வரையறுக்கப்படும் இத்தகைய கொலைகள், கீழ்ச்சாதி என்று ‘தாழ்த்தி’ வர்ணிக்கப்படும் இனப்பெண்ணை, மேல்சாதி என்று ‘உயர்த்தி’ வர்ணித்துக்கொள்ளும் இன ஆண் காதலித்துத் திருமணம் முடிக்கும்போது அவ்வளவாக நடப்பதில்லை; கீழ்ச்சாதி என்றாலும், பெண்ணைவிடப் பணக்காரராக இருந்தால் பிரச்னையே வெடிப்பதில்லை; அவரே உயர்பதவியில் இருந்துவிட்டால் துளிகூட எதிர்ப்பு காட்டப்படுவதில்லை; அரசியலில் உயரிடம் பிடித்து வசதி வாய்ப்புகளோடு வாழ்கிறார் என்றால் யாரும் மூச்சுகூட விடுவதில்லை.
நம்முடைய சொந்தபந்தத்தில், நம்முடைய ஊர்களில், நம்முடைய தெருக்களில் இத்தகைய தம்பதிகள், நம் கண்முன்னே நடைபோட்டுக்கொண்டிருப்பதைத் தினமும் சந்திக்கிறோம்தானே!

இதுவே வசதிவாய்ப்புகளற்ற ஏழ்மை நிலையிலோ, பெண்ணைவிட குறைவான வசதியுடனோ இருந்தால்... காதலனுடன் சேர்த்துப் பெண்ணின் கதையையும் முடிப்பதுதான் நடக்கிறது. அல்லது, அந்தப் பெண்ணை நடைப்பிணமாக ஒடுக்கிப்போடுவதும் நடக்கிறது. இதிலிருந்து மீண்டு எழுந்து நிற்க வேண்டும்... வாழ்ந்துகாட்ட வேண்டும் என்பதைத்தான் கௌசல்யா உணர்த்திக்கொண்டிருக்கிறார்.

‘அப்பாவையே தூக்கு மேடைக்கு அனுப்பிவிட்ட பாதகி...’ என்று ஆரம்பித்து நாக்கூசும் வார்த்தைகள் வரை அந்தப் பெண்ணின் மீது வாரி வீசப்படுகின்றன. ஆனால், ‘பெற்ற மகளையே கொல்வதற்கு ஆட்களை அனுப்பியவர்’ என்பதை மட்டும் வசதியாக மறந்துவிடுகிறார்களே ஏன்?

உண்மையில், இங்கே பேசப்படும் சாதி, கௌரவம் அனைத்தும் வெத்துவேட்டுகள் என்பதுதான் உண்மை. தங்கள் வீட்டுப் பையன், கீழ்ச்சாதி என்று கூறப்படும் சாதியைச் சேர்ந்த பெண்ணை மணமுடித்தால் ஏற்றுக்கொள்பவர்கள், அதே காரியத்தைத் தங்கள் வீட்டுப் பெண் செய்தால் மட்டும் அரிவாளைத் தூக்குகிறார்கள். இங்கேயும் பொங்குவது... ஆணாதிக்கமே!

நான் சொல்வது சரிதானே தோழிகளே!

உரிமையுடன்,

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick