சிறுமை கண்டு பொங்குவாய்! - #உடைத்துப்பேசுவேன் #SpeakUp

பொறுத்தது போதும்நெருஞ்சி - ஓவியம் : பாரதிராஜா

முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் கடந்த சில மாதங்களாக, பாலியல் வன்முறைகளுக்கு எதிராகப் பெண்களின் குரல்கள் உலகம் முழுக்க ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன. ஹாலிவுட் உலகின் மிகப்பெரிய தயாரிப்பாளர் ஹார்வி வின்ஸ்டன்மீது, அவரிடம் முன்னர் பணிபுரிந்த பல பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்தது தீயாகப் பற்றிக்கொள்ள, அது பாலியல் வன்முறை குறித்து விவாதத்தை பல நாடுகளிலும் ஆரம்பித்துவைத்தது. சமூக வலைதளங்களில் #MeToo (நானும்) என்கிற `ஹேஷ்டேக்’கின் மூலம், பல பெண்கள் ‘நாங்களும் பாலியல் வன்முறைக்கு ஆளாகியிருக்கிறோம்’ என்று முதன்முறையாக மௌனம் கலைக்கத் தொடங்கினார்கள்.

ஹார்வி வின்ஸ்டன் என்பது ஒரு தனி மனிதன் மட்டுமே அல்ல. நாம் ஒவ்வொரு நாளும் பல ஹார்வி வின்ஸ்டன்களைச் சந்தித்து வருகிறோம். வீடுகளில் தொடங்கி அலுவலகம்வரை எல்லா இடங்களிலும் இந்த ஹார்விக்கள் பெண்களைப் பாலியல் ரீதியாகச் சீண்டுவதை அவர்களுடைய உரிமையாக நினைக்கிறார்கள். இந்த ஹார்விக்களை எதிர்த்து சில இடங்களில் நம்மால் பேச முடிகிறது; செயல்பட முடிகிறது. சில இடங்களில் முடிவதில்லை. நம்முடைய சூழல் அல்லது அவர்களுடைய உயரிய இடம் நம்மைத் தயங்க வைக்கிறது. இன்னும் சில நேரங்களில், `எதுக்கு தேவையில்லாம சண்டை போட்டுக்கிட்டு’ என்கிற எண்ணம். ஏன்... ஹாலிவுட் ஹார்வியைப் பற்றி பேசவே அந்தப் பெண்களுக்கு பல ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறதே!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick