``அவர் திடீர்னு வந்துட மாட்டாரானு இன்னமும் ஏங்குறேன்...’’

அந்த நாள் வி.எஸ்.சரவணன் - படங்கள் : ராபர்ட் செல்வராஜ்

2004-ம் ஆண்டு டிசம்பர் 26... அன்றுதான் இந்திய மக்களுக்கு, ‘சுனாமி’ எனும் சொல் அறிமுகமானது. ஆனால், பல்லாயிரக்கணக்கில் மரணங்கள், லட்சக்கணக்கில் உறவுகளைத் தொலைத்த மனிதர்கள் என அதற்கு நாம் கொடுத்த விலை அதிகம்.  பூமியில் ஏற்படும் நில அதிர்வினால் கடலில் தோன்றும் ராட்சத அலைகளே சுனாமி. இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் 9.1 ரிக்டர் அளவில் உருவான பூகம்பத்தினால் தோன்றிய சுனாமி... இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களைத் தாக்கியது. தமிழகத்தில் நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, கடலூர், சென்னை உள்ளிட்ட இடங்கள் அளவிட முடியாத பேரழிவுக்கு உள்ளாகின. குறிப்பாக, நாகப்பட்டினம் பகுதியில் ஆயிரக்கணக்கான மனிதர்கள் மாண்டுபோயினர்.

நாகப்பட்டினம் கடற்கரையில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், கடலையே வாழ்க்கையாகக்கொண்ட மீனவர்கள் எனக் கொத்துக் கொத்தாகப் பிணங்கள் கிடந்தன. உயிர் தப்பினால் போதும் என்று பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றவர்கள் தங்கள் மகனை, மகளை, கணவனை, மனைவியை, தாயை, தந்தையைக் காணாது பரிதவித்தனர். கட்டியிருந்த உடையோடு, அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாது சொந்த ஊரிலேயே அகதிகளாகினர். உறவுகளைத் தேடலாம் எனக் கிளம்பியவர்களையும், ‘மீண்டும் சுனாமி வரப்போகிறது’ எனும் வதந்தி தடுத்தது. முதல் நாள்தான் கிறிஸ்துமஸ் பண்டிகை. வேளாங்கண்ணியில் அப்பண்டிகையைக் கொண்டாடியவர்கள், அடுத்த நாளும் கடல் குளியலுக்காக இறங்க, பேரலையில் சிக்கி உயிரைப் பலி கொடுத்தனர்.

சுனாமியின் பேரழிவு துயரம் நிகழ்ந்து 13 ஆண்டுகளாகின்றன. என்றாலும், தங்கள் எதிர்காலம் என நம்பியிருந்த உறவுகளை இழந்தவர்களின் சிதைந்த வாழ்க்கை இன்னும் சீராகவில்லை. பெண்களால் அந்தக் கொடூர நினைவைவிட்டு வெளியேறவே முடியவில்லை என்பதை, அவர்களோடு நாம் பேசியதிலிருந்து உணர முடிந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick