ஆரோக்கியம் காக்க... அறுசுவையும் அதிகரிக்க!

கிச்சன் பேஸிக்ஸ்விசாலாட்சி இளையபெருமாள் - படங்கள் : லக்ஷ்மி வெங்கடேஷ்

கிச்சன் பேஸிக்ஸ் என்றால் என்ன?

முழுமையான இந்தியச் சமையல் செய்வதற்கு சில அடிப்படைப் பொருள்கள் தேவை. உதாரணமாக இட்லி, தோசை மாவைப் பயன்படுத்தி ஏராளமான புதிய உணவுகளைத் தயாரிக்கலாம். சாம்பார் பொடி, ரசப்பொடி, இட்லி மிளகாய்ப் பொடி போன்ற சில பொடி வகைகளைப் பயன்படுத்தி மேலும் பல ரெசிப்பிகளை உருவாக்கலாம். கோதுமை மாவு, அரிசி மாவு வகைகளைப் பயன்படுத்தியும் பல்வேறு சுவைகளைக் கொண்டுவரலாம். இவற்றுக்கு அடிப்படைத் தேவை யான மாவு, பொடி வகைகளை வாரம் ஒருமுறை, மாதம் ஒருமுறை, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அல்லது வருடத்துக்கு ஒருமுறை கூட தயாரித்து வைத்துக்கொள்ளலாம்.

அடிப்படை ரெசிப்பிகளின் அவசியம்

இன்று கடைகளில் கிடைக்கும் பொருள்களில் கலப்படமும் போலிகளும் கலந்தே வருகின்றன. அதோடு, தயாரிக்கப்பட்ட பொருள்கள் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டுக் கடைகளுக்கு வந்து சேர்வதற்கு அந்தந்தப் பொருள்களைப் பொறுத்துக் குறைந்தபட்சம் ஒரு நாளோ, பல நாள்களோ ஆகின்றன. உதாரணமாக, பாக்கெட்டுகளில் விற்கப்படும் இட்லி, தோசை மாவு வகைகள் தயாரிக்கப்பட்ட அடுத்த நாள்தான் கடைகளுக்கு வந்து சேர்கின்றன. குளிர்சாதனப்பெட்டியிலிருந்து வெளியே எடுக்கப்பட்ட பிறகு மாவு குறைந்த நேரமே நன்றாக இருக்கும் என்பதால், நமக்கு வந்து சேரும்வரை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகச் சில பொருள்கள் கலக்கப்படுகின்றன.

தரமான மூலப்பொருள்களைப் பயன்படுத்தித் தயாரித்தால் உற்பத்திச் செலவு அதிகமாகும். குறைந்த விலைக்கு விற்றால்தான் மக்கள் அதிக அளவில் வாங்குவார்கள் என்கிற எண்ணத்தில் தரம் குறைந்த மூலப்பொருள்களை உபயோகப்படுத்தியும் சிலர் தயாரிக்கிறார்கள். இதன் விளைவாக, கடைகளில் தரம் குறைந்த, கலப்படமான பொருள்களும் நிறைந்து காணப்படுகின்றன.

இவற்றைத் தவிர்க்க... சில அடிப்படைப் பொருள்களை நம் வீட்டிலேயே தரமான பொருள்களைப் பயன்படுத்தி, சுத்தமாகத்  தயாரித்துச் சேமிக்கலாம். உதாரணமாக இட்லி, தோசைக்கு மாவு அரைத்து உப்பு சேர்க்காமல் காற்றுப்புகாத டப்பாவில் சேகரித்து வைக்கலாம். சாம்பார் பொடிகளை மஞ்சள் சேர்க்காமல் தயாரித்து, காற்றுப்புகாத டப்பாவில் சேகரித்தால் ஒரு வருடம் வரைகூட ஃப்ரிட்ஜில் வைக்காமல், வெளியில் வைத்தே பயன்படுத்தலாம். வீட்டிலே தயாரிப்பதால் சுகாதாரமாகவும் இருக்கும்; உடலுக்கும் தீங்கு விளைவிக்காது.

கடைகளில் விற்பதைவிட குறைந்த செலவிலேயே தயாரிக்க முடியும். நமது சமையலின் சுவை கூடுவதும் உறுதி. இதை இன்றைய தலைமுறையினர் தெரிந்துகொள்வது அனைவருக்கும் நன்மை பயக்கும்.

அடிப்படை ரெசிப்பிகளை எப்படி வீட்டிலேயே தயாரிப்பது என்பதைப் பற்றி இந்தப் பகுதியில் நாம் தெரிந்துகொள்ளலாம். தென்னகப் பொடிகளின் தாயாகக் கருதப் படுவது சாம்பார் பொடிதானே? இதோ உங்களுக்காக சாம்பார் பொடிகளில் சில வகைகள்...

முனுக்கி வைத்த சாம்பார் பொடி

தேவையானவை:

 துவரம்பருப்பு - அரை  கப்
 காய்ந்த மிளகாய் - ஒரு கப்
 பச்சரிசி - 4 டேபிள்ஸ்பூன்
 சீரகம் - 2 டீஸ்பூன்

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை வெறும் வாணலியில் மிதமான தீயில் தனித்தனியாக, பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். ஆறியதும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். இதைக் காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்