அன்பு அத்தனை பவர்ஃபுல்! - `புயல்' அஞ்சலி பாட்டீல்

இவள் யாரோ?ஆர்.வைதேகி

‘காலா’வில் புயலாக அசத்திய அஞ்சலி பாட்டீல் நிஜத்தில் தென்றலாக வருடுகிறார். இந்த மராத்திப் பெண் இப்போது தமிழ் கற்றுக்கொண்டிருக்கிறாராம். ‘`தமிழ்ல எனக்குப் பிடிச்ச வார்த்தை காதல். ‘காதல்’னா லவ்... ‘கடல்’னா ‘ஓஷன்’... சரிதானே?’’ - அகராதி சொல்லுமளவுக்கு அப்டேட்டாக இருக்கிறார், அஞ்சலி!

‘`மகாராஷ்டிராவின் நாசிக் நகரத்தைச் சேர்ந்த மிடில் கிளாஸ் பெண் நான். அப்பா, அம்மா, அக்கா, அண்ணான்னு அன்புக்குக் குறையே இருந்ததில்லை. என்னை நான் ‘எமோஷனல் சயின்ட்டிஸ்ட்’டுனு சொல்லிக்கிறதுதான் சரியா இருக்கும்னு நினைக்கிறேன். எப்போதும், எல்லாத்தையும் கேள்வி கேட்கற கேரக்டர் நான்.

அன்புன்னா என்ன? உறவுகள்னா என்ன? பெற்றோர் எப்படியிருக்கணும்? ஆசிரியர்கள் - மாணவர்கள் எப்படியிருக்கணும்? இப்படி சின்ன வயசுலயே எனக்குள்ள ஏராளமான கேள்விகள் இருந்திருக்கு. இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை தேடணும்னா நான் வளர்ந்த இடத்தைவிட்டு வெளியில வரணும்னு தோணினது. என்னுடைய தேடல்களுக்கு நாடகங்கள் சரியான களமா இருக்கும்னு நினைச்சேன். நாடகங்கள் மூலமா சமுதாய நிகழ்வுகளைக் கேள்வி கேட்க முடியும்... காலங்காலமா நம்பப்பட்ட கருத்துகளைத் தகர்த்தெறிய முடியும்னு நம்பினேன்...’’ - தத்துவமாக ஆரம்பிக்கிறவர் தன்னியல்பு மாறாமல் தொடர்கிறார்.

‘`மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த எனக்குப் பெற்றோரைச் சம்மதிக்க வைக்கிறது அத்தனை சுலபமாயில்லை. எமோஷனலா பிளாக்மெயில் பண்ணித்தான் என் காரியங்களைச் சாதிச்சுக்கிட்டேன். எனக்குப் பிடிவாத குணம் அதிகம். `நடிப்புங்கிறது மரியாதைக்குரிய வேலையில்லை'ங்கிறது அப்பாவின் எண்ணம். ‘நாலு பேர் என்ன பேசுவாங்களோங்கிறதுதானே உங்க கவலை? எனக்குக் கல்யாணம் பண்ணி வெச்சிடுங்க. உங்க கடமையும் தீர்ந்துடும்.  அதுக்கப்புறம் என் கணவரையும் புகுந்த வீட்டுக்காரங்களையும் சம்மதிக்க வெச்சு நாடகத் துறைக்குப் போறது என் பொறுப்பு’னு சொன்னேன். அதுக்குப் பிறகுதான் நாடகத் துறையின் மேல எனக்கிருந்த அதீத ஈடுபாடு அவங்களுக்குப் புரிஞ்சது. என்னை நோக்கி சமுதாயம் எழுப்பின கேள்விகளை எதிர்கொண்டாங்க. என்கூடச் சேர்ந்து அவங்களும் வளர்ந்தாங்க.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick