நமக்குள்ளே...

`யு.என். வுமன் இந்தியா’ எனும் ஐ.நா. சபையின் இந்தியப் பெண்களுக்கான அமைப்பு அண்மையில் பெண்களை உற்சாகப்படுத்தும் மியூசிக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. `முஜே ஹக் ஹை (எனக்கு உரிமை இருக்கிறது)’ என்று தொடங்கும் அந்தப் பாடல், மும்பையில் வெளியிடப்பட்டது. ஒவ்வோர் இந்தியப் பெண்ணும் தனக்கான விதிமுறைகளைத் தானே வகுக்கவும், தன் வாழ்க்கையின் முடிவுகளைத் தானே எடுக்கவும் ஊக்கப்படுத்தும் விதத்தில் இந்த வீடியோவை வெளியிட்டிருப்பதாக அறிவித்துள்ளது (காண: http://bit.ly/mujheHaqHai).

அர்கோ முகர்ஜி இசையமைத்து பாடகி நீதி மோகன் பாடியுள்ள இந்த இசைக் காணொலியில், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், வஹீதா ரஹ்மான், விளையாட்டு வீராங்கனைகள் சானியா மிர்சா, மித்தாலி ராஜ், தீபா மாலிக், காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயது கிக்-பாக்ஸிங் வீராங்கனை தஜிமுல் இஸ்லாம், எழுத்தாளர் மீரா கன்னா, பாடகிகள் ஆஷா போஸ்லே, அல்கா யாக்னிக், 80 வயது ‘ரிவால்வர் பாட்டி’ சந்திரா தொமர், மெர்வின் ஜோசப் ஐபிஎஸ், ‘பைக்கர்னி’ பைக் சாதனைப் பெண்கள், மாதுங்கா அனைத்து மகளிர் ரயில் நிலைய அதிகாரிகள் என ஒரு பெரும் பெண்கள் படையே நடித்துள்ளது.

இந்தக் காணொலியின் வெளியீட்டு விழாவில் பேசிய பத்தே வயதான கிக்-பாக்ஸர் தஜிமுல் இஸ்லாம், `பெண்களுக்காகவே உலகம் படைக்கப்பட்டது என்று எல்லோரும் கூறுவதைக் கேட்கிறோம். அவர்களைப் பிற்போக்காகவே வைத்திருந்தால், எப்படி முன்னேறுவது? அவர்களுக்கு வேண்டியதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் சுதந்திரம் வேண்டும். அவர்களை வாழவிடுங்கள். பெண் குழந்தைகள் சிறந்தவர்கள்தாம் என நம்புங்கள்’ என்று அதிரடியாகப் பேசியிருக்கிறார். பத்தே வயதான சிறுமிக்கு இருக்கும் உரிமை உணர்வு நம்மில் பலருக்கு ஏன் இல்லை?

இன்றைய பெண்ணுக்கு அவளை உடைக்கும் அஸ்திரங்கள் சுற்றிச் சுற்றி நிறையவே இருக்கின்றன. கைகொடுத்துத் தூக்கிவிட யாராவது வரமாட்டார்களா என்று ஒரு நொடிப்பொழுதாவது ஏங்காத பெண் இங்கு இல்லைதானே? நமக்கு நாமே ஊக்க சக்தியாக, நமக்கு நாமே ஒரு இன்ஸ்பிரேஷனாக, நமக்கு நாமே ஒரு தூண்டுகோலாக ஏன் இருக்கக் கூடாது?

இந்தக் காணொலியில் நடித்தவர்கள் மட்டுமா சாதனைப் பெண்கள்? சிக்கலான இந்தக் காலகட்டத்தில் பெண் என்னும் அடையாளத்துடன் வாழும் நாம் ஒவ்வொருவருமே  சாதனைப் பெண்தானே? முஜே ஹக் ஹை! எனக்கு உரிமை இருக்கிறது... பெண்ணாக வாழ, என் முடிவுகளை நானே எடுக்க, எனக்கான சட்டத்தை நானே அமைக்க, கொண்டாட்டமாக வாழ!

கைகொடுத்து வாழ்ந்து பார்ப்போம். வாருங்கள், தோழிகளே!

உரிமையுடன்,

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்