அஞ்சறைப் பெட்டி - உள்ளுறுப்புகளுக்கு உணர்வூட்டும் அற்புத மருந்து இஞ்சி!

டாக்டர் வி.விக்ரம்குமார்

`செரிமான உறுப்புகள் மற்றும் சுரப்பிகளோடு சேர்ந்து, அஜீரணத் தொந்தரவுகளைத் தடுக்கும் அற்புத மருந்து இஞ்சி.  ஆத்திரகம், அல்லம், ஆர்த்தரகம், இலாக்கொட்டை, நறுமருப்பு, மதில் போன்றவை இஞ்சியின் வேறு பெயர்கள். `காலையில் இஞ்சி… கடும்பகல் சுக்கு… மாலையில் கடுக்காய்…’ என்பது எளிமையான ஆரோக்கியச் சூத்திரம். இப்படி, காலம் அறிந்து தொடர்ந்து ஒரு மண்டலம் சாப்பிட்டால் உடல் திடம்பெறும். நோய்கள் வராமல் பாதுகாக்க சித்தர்கள் வகுத்த சிறந்த கற்ப முறை இது.

இஞ்சியைத் தோல் நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி உலர்த்தி, தேனில் ஊறவைத்து, தினமும் சாப்பிட்டால் நரை, திரை, மூப்பு சீக்கிரம் நெருங்காது என்கிறது சித்த மருத்துவம். இந்த ‘நரை திரை மூப்பு’ என்பதில் ஒளிந்திருக்கும் சூட்சுமத்தை அவிழ்ப்பதற்காக இஞ்சி சார்ந்து இன்றும் பல்வேறு ஆராய்ச்சிகள் நடக்கின்றன. இதன் முடிவுகளோ பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உறுதிப்படுத்தப்பட்டு ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டுள்ளன.

ஜப்பானில் புகழ்பெற்ற `பெனி-ஷோகா' எனப்படும் சிவந்த நிறமுள்ள இஞ்சி ஊறுகாய்மீது, அந்நாட்டு மக்களுக்கு அலாதிப் பிரியம். நொதிக்கவைத்த காய்கறிகளைக்கொண்டு தயாரிக்கப்படும் கொரிய வகை சாலட்டுகளில் இஞ்சி முக்கியமானது. இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியில் `ஜிஞ்சர்-பிரெட்' என்கிற இஞ்சி ரொட்டிகள் பிரபலம். மியான்மர் நாட்டு மீன்கறியில், மீன் வாசனையைவிட, இஞ்சியின் வாசனை தூக்கலாக இருக்கும். அதிக அளவில் இஞ்சி சேர்த்து மீன்கறி சமைக்கும்போது, மீன்வாடை குறைவதாக மியான்மர் மக்கள் கருதுகின்றனர். ஜமைக்கா நாட்டின் ‘காரமான மசாலாப் பொடி’யில் இஞ்சி சேர்க்கப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick