"அப்பா வாங்கித் தர்ற பிரியாணிக்காகவே டிராமா போடுவோம்!” | Aval arangam - Kannadasan's daughter Revathi Shanmugam - Aval Vikatan | அவள் விகடன்

"அப்பா வாங்கித் தர்ற பிரியாணிக்காகவே டிராமா போடுவோம்!”

அவள் அரங்கம் - சமையல்கலை நிபுணர் ரேவதி சண்முகம்பொக்கிஷம்தொகுப்பு: ஆ.சாந்தி கணேஷ் படம் : ப.சரவணகுமார்

ரேவதி சண்முகம்... கவிஞர் கண்ணதாசனின் மகள் என்கிற அடையாளத்தைத் தாண்டி, பிரபல சமையல்கலை நிபுணர் என்று தனக்கென ருசியான ஓர் அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டிருப்பவர். இந்த உணவுச் சிறப்பிதழில் வாசகிகளின் கேள்விகளுக்கு சுவையான பதில்கள் தருகிறார்.

சமையல் பக்கம் உங்களை ஈர்த்தது எது?

- கே.கலாவதி, திருப்பூர்


ஓர் உண்மையைச் சொல்லட்டுமா கலாவதி... கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் எனக்குச் சமைக்கவே தெரியாது. துவரம்பருப்புக்கும் கடலைப்பருப்புக்குமே வித்தியாசம் தெரியாது. அந்தக் காலத்துல இப்ப இருக்கிற மாதிரி நிறைய பொழுதுபோக்குகள் கிடையாது. கிச்சன்ல விதவிதமா சமைச்சுப் பார்த்துத்தான் பொழுதைப் போக்கணும். இங்கிலீஷ் சமையல் புத்தகங்களைப் பார்த்து பனீர், க்ரீம் போட்டு செய்யற மாதிரியான டிஷ்களையெல்லாம் முயற்சி பண்ணிப் பார்ப்பேன். நல்லா வர்ற ரெசிப்பிகளை மட்டும் வீட்ல மத்தவங்களுக்குச் சாப்பிடக் கொடுப்பேன். என் புகுந்த வீட்ல சமையல் நல்லா இருந்தா மனம்விட்டுப் பாராட்டுவாங்க. அந்தப் பாராட்டுதான் என்னைச் சமையல் பக்கம் ஈர்த்தது.

உங்கள் அப்பா கண்ணதாசன் உங்களை சினிமாத் துறையில் ஈடுபடுத்த விரும்பினாரா?

- எஸ்.ரெஜினா, சென்னை-16


என்னது... எங்கப்பா அவருடைய பொண்ணுங்களை சினிமாவுல ஈடுபடுத்துறதா? வாய்ப்பே இல்லைங்க. அவருக்கு நாங்க வாசல்ல வந்து நின்னாலே பிடிக்காது; கண்ணுல பளிச்னு மை வெச்சா பிடிக்காது; தலை நிறைய பூ வெச்சா பிடிக்காது. இன்னொரு விஷயம் சொல்லட்டா... அரசியல்வாதிகள், சினிமாக்காரர்கள்னு எப்பவும் அப்பாவைப் பார்க்க யாராவது வீட்டுக்கு வந்துட்டே இருப்பாங்க. அதனால, வீட்டுப் பொண்ணுங்க எங்களுக்கெல்லாம் பின்பக்கம் ஒரு வாசல் இருக்கும். நாங்க வெளிய போறது, வர்றது எல்லாம் அந்த வழியிலதான். இது மட்டுமல்ல, எங்களுக்குச் சினிமா பார்க்கிறதுக்கும் அனுமதி கிடையாது.

எங்கம்மா அதுக்கு மேல. ஒரு நடிகரைப் பிடிச்சிருக்குன்னு சொன்னா, ‘அதெப்படி ஓர் ஆம்பளையைப் பிடிச்சிருக்குன்னு சொல்லுவே’னு அடிச்சுடுவாங்க!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick