கல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு | Cloves: Health benefits and uses - Aval Vikatan | அவள் விகடன்

கல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு

அஞ்சறைப் பெட்டி டாக்டர் வி.விக்ரம்குமார்

சுமைமாறா மரத்தின் சிறிய மலர் மொட்டான கிராம்பு, வாசனையாலும் வசீகரத்தாலும் மருத்துவக் கூறுகளாலும் பல்லாயிரம் ஆண்டுகளாக நமது நலன் காத்துவருவது இயற்கையின் கவிதை. வைரத்தை ஏந்திக்கொண்டிருக்கும் மோதிரம்போலவே காட்சியளிக்கும் கிராம்பு, அஞ்சறைப் பெட்டியின் விலை மதிப்பில்லா வைரமே!

நறுமணமூட்டிகளில் அதிகளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்களைக் கொண்டது கிராம்பு. ஆரம்பநிலை பல்வலியைப் போக்க, கிராம்புத் தைலத்தைப் பஞ்சில் நனைத்துத் தடவும் மருத்துவம் இன்றைக்கும் உதவுகிறது. பல் மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் களிம்புகளில் கிராம்பின் நுண்கூறுகள் நிச்சயம் இடம்பிடித்திருக்கும். பிரியாணியில் தொடங்கி அடிப்படை இனிப்புகள் வரை கிராம்பின் பங்களிப்பு உறுதி.

இது ஆணி போலவும் காணப்படுவதால், `க்ளோவ்’ (Clove) என்று பெயர் வந்தது. லவங்கம், உற்கடம், அஞ்சுகம், சோசம், திரளி, வராங்கம் போன்ற வேறு பெயர்களும் உண்டு. காரத்தோடும் சிறிது இனிப்புச் சுவையோடும் விறுவிறுப்புத்தன்மை கொண்டிருக்கும் கிராம்பு மயக்கம், வாந்தி, பேதி, வாய்வுக் கோளாறுகள், ஆசனவாய் எரிச்சல், தசைப்பிடிப்பு, செவி நோய்கள், சரும நோய்கள் என பலவற்றை நீக்கும் திறன் கொண்டது. ‘பித்த மயக்கம் பேதியோடு வாந்தியும்போம்’ எனத் தொடங்கும் சித்தர் அகத்தியரின் பாடல், கிராம்பின் குணங்களை விவரிக்கிறது.

`சீனத்தின் பொற்காலம்’ எனப்படும் `ஹான் ராஜ்ஜியத்தில்’ அரசரிடம் நிறைகுறைகளைக் கூற வேண்டுமென்றால், பொதுமக்கள் வாயில் கிராம்பை அடக்கிக்கொண்டுதான் பேச வேண்டுமாம். கிருமிகள் வாய்மூலம் பரவி அரசரைத் தாக்காமல் இருக்க இந்த ஏற்பாடு!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick