நமக்குள்ளே!

`இளம்பெண் ஒருத்தி உடம்பு முழுக்க தங்க நகைகளை அணிந்துகொண்டு, எவ்வித அச்சமுமின்றி நள்ளிரவில் தன்னந்தனியாக வெளியே சென்று பத்திரமாக வீட்டுக்குத் திரும்ப முடியும் என்கிற நிலை என்று ஏற்படுகிறதோ, அன்றுதான் நாடு உண்மையான விடுதலை அடைந்ததாக அர்த்தம்.'

- மகாத்மா காந்தியின் இந்த வார்த்தைகள், இன்றுவரையிலும் கனவாகவே இருக்கிறது.

சென்னை போன்ற பெருநகரங்களில்கூட பிரதான சாலைகளில் செல்லும்போதே தாலி உள்ளிட்ட தங்க நகைகளைப் பெண்களிடம் கொள்ளையடிப்பது தொடர்கதையாகவே இருக்கிறது. அதிலும் கடந்த வாரத்தில் நடைபெற்ற சில சம்பவங்கள் குலைநடுங்க வைக்கின்றன.

தொழில்நுட்ப நிறுவனங்கள் பெருவாரியாக அமைந்துள்ள சென்னையின் ஓஎம்ஆர் சாலை அருகேயுள்ள தாழம்பூர்-பெரும்பாக்கம் பிரதான சாலையில், பணி முடித்து இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார் ஐடி பணியாளரான ஒரு பெண். அவரை வழிமறித்துத் கடுமையாகத் தாக்கி, அணிந்திருந்த தங்கச்சங்கிலி, ஐபோன், இருசக்கர வாகனம் அனைத்தையும் பறித்துக்கொண்டு, குற்றுயிரும் குலையுயிருமாக சாலையோர புதரில் வீசிச்சென்றுள்ளனர் சில கயவர்கள். 

அடுத்து, பகல் நேரத்திலேயே ஒரே நாளில் இரு சம்பவங்கள்... இரண்டுமே கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள குற்றங்கள்.

குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண், கணவருடன் சாலையில் நடந்துசெல்லும் போது, சங்கிலியைப் பறித்துச்செல்கிறார்கள் மோட்டார் பைக்கில் வந்த இருவர். சம்பவம் நடைபெற்றது மாலை 5.30 மணி.

வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஒரு பெண்ணின் அனுபவம் கொடுமையானது. காலை 7.30 மணிக்கு தெருவில் நடந்து செல்லும்போது, 15 பவுன் தங்கச்சங்கிலியைப் பிடித்து இழுக்கிறார்கள். கனமான சங்கிலி அறுபடாதநிலையில், தடுமாறி விழும் அவரை ஏறத்தாழ நூறு மீட்டர் தொலைவு சாலையிலேயே இழுத்துச்செல்கிறார்கள் கொள்ளையர்கள்.

இந்தச் சம்பவங்களில் சுற்றியிருப்பவர்கள் யாரும் உதவிக்கு வரவில்லை. காரணம், கொள்ளையர்களிடம் ஆயுதங்கள் இருக்குமோ, உதவிக்குச் சென்றால் நம்மையும் தாக்குவார்களோ என்கிற பயம், உயிர் பயம்.

இதுதானே நிதர்சனம். சரி, அப்படியென்றால் இதுபோன்ற பிரச்னைகளுக்குத் தீர்வுதான் என்ன?

`பொதுவெளியில் தனக்குப் பிடித்தமான நகையை அணிந்து நடமாட ஏன் நாம் பயப்பட வேண்டும்?', `பிறகு, காவல் துறை எதற்கு... அரசாங்கம் எதற்கு?', `எத்தனை பேருக்குத்தான் அரசாங்கத்தால் பாதுகாப்பு அளிக்க முடியும்?'

- இதுபோன்ற வாதங்கள் பொதுவெளியில் நடக்கின்றன. உங்கள் கருத்துகளைத் தெளிவாக எங்களுக்கு எழுதி அனுப்புங்களேன் தோழிகளே.

உரிமையுடன்,

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick