நமக்குள்ளே!

`பெண்ணென்று கொட்டு முரசே!’ என்று தமிழகத்தின் தலைசிறந்த பெண்களைப் பாராட்ட வருகிறாள் உங்கள் அவள். ஆம்... தமிழ்க் குடும்பங்களின் தலைமகள் வழங்கும் ‘அவள் விருதுகள்’ என்கிற இந்தத்  தன்னிகரற்ற அங்கீகாரம், உறுதியும் உரமும் கொண்ட உன்னதப் பெண் சமுதாயத்தை மேலும் உயர்த்தும் ஒரு சிறந்த முன்னெடுப்பு. முதன்முறையாக முழுக்க முழுக்க பெண்களை மட்டுமே பாராட்ட ஒரு பிரமாண்ட மேடையைத் தயார் செய்திருக்கிறது உங்கள் அவள் விகடன். 

அறிந்த முகங்களுக்கு மட்டுமல்ல... நீங்கள் அறியாத - ஆனால், அவசியம் அறிய வேண்டிய முகங்களுக்கும் அங்கீகாரம் அளிக்கும்விதமாகப் பல விருதுகள். கல்வி, இலக்கியம், அரசுப்பணி, மருத்துவம், அரசியல்,  தொழில்முனைவோர் என அறிவுசார் பிரிவிலும்; சவாலான துறை, விளையாட்டு, இசை, சினிமா, சின்னத்திரை, பாரம்பர்யக் கலை எனப் பரந்துபட்ட வெளியிலும் தங்கள் திறமையால் முத்திரை பதித்த பெண்களுக்கு வெற்றிமாலை சூட்டி மகிழவிருக்கிறோம். குழுவாக ஒன்றிணைந்து உழைக்கும் பெண்களுக்கும் விருது, தனித்து நின்று போராடி வென்ற சாதனைப் பெண்களுக்கும் விருது என, உறுதிகொண்ட பெண்களின் உள்ளம்கவர் மேடையாக உங்கள் வருகைக்குக் காத்திருக்கிறது அவள் விகடனின் விருது மேடை.

வரும் மார்ச் 14 அன்று சென்னை வர்த்தக மையத்தில் சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கான சகலகலா சங்கமமாக, உழைக்கும் பெண்களுக்கு உற்சாகம் அளிக்கும் ஊற்றாகப் பொங்கி வரவிருக்கிறது இதற்கான விழா. `அவள் விருதுகள்' என்பது பெண்களின் திறமைக்கு அங்கீகாரமாகவும், பெண்களின் முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டாகவும் அமையும்.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick