நமக்குள்ளே... | Editor Opinion - Aval Vikatan | அவள் விகடன்

நமக்குள்ளே...

ரு பெண்ணை நிலைகுலையச் செய்ய வேண்டும் என்றால், அவருடைய நடத்தையைப் பற்றி ஒரேயொரு வார்த்தையை எடுத்துவிட்டால் போதும்... ஒட்டுமொத்தமாக அவளை காலி செய்துவிடும் இந்தச் சமூகம். பெண்களுக்கு எதிராகக் காலங்காலமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் இந்தக் கேவலமான ஆயுதத்தை, அண்மைக்காலமாக நிறைய பேர் கையில் தூக்கிக்கொண்டு சுற்ற ஆரம்பித்திருப்பது கேவலத்திலும் கேவலம்.

பாலிவுட்டின் பிரபல டான்ஸ் மாஸ்டரான சரோஜ் கான், சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், இந்தித் திரையுலகில் வாய்ப்புகளுக்காக ‘அட்ஜஸ்மென்ட்’ செய்வது காலங்காலமாக நடக்கிறது’ என்றும், ‘எல்லாத் துறைகளிலும் இது சகஜமே’ என்றும் கூறியிருக்கிறார். கூடவே, ‘ஆண்கள், பாலியல் பலாத்காரம் செய்து அப்படியே விட்டுச் செல்வதில்லை. அந்தப் பெண்கள் உண்ண உணவுக்கும் வழி செய்கிறார்கள்’ என்றெல்லாம் கொஞ்சம்கூட சமூக அக்கறையோ, பொறுப்போ இல்லாதவராகப் பேசியிருக்கிறார் சரோஜ் கான். இதற்கு நாடு முழுக்க கடுமையான எதிர்ப்பு கிளம்பவே, மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

இங்கே தமிழகத்தில், பெண் பத்திரிகையாளர்கள் பற்றி மிகவும் அவதூறாக எழுதப்பட்ட முகநூல் பதிவு ஒன்றை, தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்து சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறார், பாஜகவைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான எஸ்.வி.சேகர். கடுமையான எதிர்ப்பு கிளம்பியதோடு, வழக்குகளும் பாயவே... ‘அது இன்னொருவருடைய கருத்து. என்றாலும், அதைப் பகிர்ந்ததற்காக மன்னிப்பு  கோருகிறேன்’ என்று கூறியிருக்கிறார் அவர்.

பணிக்குச் செல்லும் பெண்கள் குறித்த இதுபோன்ற விமர்சனங்கள், வெகு சுலபமாகவே பொதுவெளியில் ஆண்களால் வைக்கப்படுகின்றன. ஆனால், பொறுப்பான துறைகளிலும், பதவிகளிலும் இருக்கும் பிரபலங்களே இத்தகைய மனப்போக்கில் இருந்தால், மற்றவர்களைப் பற்றி என்ன சொல்ல?

பெண் என்பவள், பொதுவெளிக்கு வருவது, பணிகளில் சேர்ந்து தலையெடுப்பது, திறமை மற்றும் அயராத உழைப்பால் பதவி உயர்வுபெற்று முன்னேறுவதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாத ஆணாதிக்கச் சிந்தனை, இந்த டிஜிட்டல் யுகத்திலும் எங்கெங்கும் பரவிக்கிடப்பதன் வெளிப்பாடாகவே இவற்றையெல்லாம் பார்க்க வேண்டியுள்ளது.

வீட்டிலிருந்தாலும் சரி, வேலைக்காக வீதிகளில் நடமாடினாலும் சரி... பெண்ணை சகமனுஷியாகப் பார்த்தாலன்றி இப்பிரச்னைக்கு முடிவு இல்லை. நூற்றாண்டுகளாகக் குரல்வளை நெரிக்கப்பட்டு, இருட்டறையில் கட்டிவைக்கப்பட்டிருந்த ஓர் இனம், தன் குஞ்சுகளுக்காக, குடும்பத்துக்காக இரை தேடிப் பறந்து திரிவதை ஆதரிக்காவிட்டாலும் பரவாயில்லை, அவர்களின் சிறகுகளை வார்த்தை அம்புகளால் சிதறடிக்காமல் இருக்கலாமே!

உரிமையுடன்,

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick