தங்கம்மா தாயம்மா

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
தெய்வ மனுஷிகள் வெ.நீலகண்டன், ஓவியம் : ஸ்யாம் படம் : ரா.ராம்குமார்

கேசவய்யா அளவுக்கு அலங்காரமா நகை செய்ற பொற்கொல்லர் சோழ தேசத்துலயே கெடயாது. மனுஷன் பட்டறையில உக்காந்துட்டாருன்னா, ராத்திரி பகல்னு பொழுதுபோறது தெரியாம கண்ணை விரிச்சு வெச்சுக்கிட்டு பொன்வேலை பாத்துக்கிட்டிருப்பாரு. கோயில்ல ஈஸ்வரனுக்கு அணிவிக்கிற ஆபரணத்திலேருந்து, ராணிங்க, இளவரசிங்க போடுற அணிகலன்கள் வரைக்கும் எல்லாத்தையும் கேசவய்யாவைத்தான் செய்யச் சொல்லுவாரு ராசா.

அந்தக் காலத்துல காவிரிக்கரையோரம் முழுக்க பெரிசு பெரிசா கோயில் கட்டிக்கிட்டிருந்தாக. படையெடுத்துப்போற தேசத்துல இருந்து அள்ளிக்கொண்டாற செல்வத்தையெல்லாம் அந்தக் கோயில்களுக்குள்ள தான் வைப்பாக. கோயில்களுக்கெல்லாம் நகை செய்யறதுக்கு தலைமை பொற்கொல்லரா கேசவய்யாவைப் போட்டாரு ராசா. கேசவய்யாவுக்குக் கீழே ஓராயிரம் பொற்கொல்லருங்க வேலை செஞ்சாக.

கேசவய்யாவோட பொஞ்சாதி பேரு சின்னம்மா. அவளும் பரம்பரையா பொன்நகை செய்யற குடும்பத்துல பிறந்தவதான். கேசவய்யாவுக்கு முறைமைக்காரி வேற. மங்கலகரமான மனுஷி. எல்லாம் இருந்தும் ஒரு புழுப்பூச்சி வாய்க்கலே வவுத்துல. ரெண்டு பேருக்கும் இது பெரும் மனக்குறையா இருந்துச்சு.  சின்னம்மா, வாரம் தவறாம ஏழு மங்கா கோயில்களுக்கும் போயி விளக்குப்போட்டு கும்பிட்டு வருவா.
தம் புருஷனைத் தங்கத்தால தொட்டில் செய்யச் சொல்லி கொண்டுபோய் கோயில்கள்ல கட்டுவா.

சின்னம்மாவோட மனக்குறையைப் போக்க அந்த ஏழு மங்கா, ஒண்ணுக்கு ரெண்டு புள்ளைகளை அள்ளிக்கொடுத்தா. ரெண்டும்  பொம்பளைப் புள்ளைக. அழகுன்னா அப்படியோர் அழகு. தங்கம்மா, தாயம்மான்னு ரெண்டு புள்ளைகளுக்கும் பேரு வெச்சு வளர்த்தாக.

குணத்துலயும் சரி; அறிவுலயும் சரி... ரெண்டு புள்ளைகளும் நெறைகுடமா வளர்ந்துச்சுக. படிப்பு, பரதநாட்டியம், லாவணி, பாட்டுன்னு  எல்லாக் கலைகளும் அதுகளுக்கு கைவந்துச்சு. இடுப்புக்குக் கீழே அலையடிக்கிற கூந்தல், செழிப்பான உடல்வாகு, நிலா மாதிரி பளிச்சுன்னு ஒளிவீசுற முகம்னு ரெண்டு புள்ளைகளும் தங்கத்துல வார்த்த மாதிரி தகதகன்னு இருந்துச்சுக. தம் புள்ளைகளுக்குப் பொன்னும் மணியுமா விதவிதமா செஞ்சுபோட்டு அழகுபார்த்தார் கேசவய்யா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick