தென்னிந்தியாவின் முதல் பெண் சினிமாத் தயாரிப்பாளர்; இயக்குநர்; பேசும் படத்தின் முதல் நடிகை! - டி.பி.ராஜலட்சுமி

முதல் பெண்கள் ஹம்சத்வனி, ஓவியம் : கார்த்திகேயன் மேடி

“வாழ்க்கையில் என்ன தடை வந்தாலும், அவற்றை நாமாகவே எதிர்கொள்ள வேண்டும். வேறு யாரிடமும் உதவி கோரக் கூடாது” - இப்படித் தன் மகள் கமலாவிடம் கூறியவர் டி.பி.ராஜலட்சுமி. தமிழ் பேசும் படத்தில் நடித்த முதல் நடிகை. திரைப்படம் தயாரித்த, இயக்கிய முதல் பெண்ணும்கூட!

திருவாரூரை அடுத்த சாலியமங்கலத்தில் 1911-ம் ஆண்டு பிறந்தார் ராஜலட்சுமி. தந்தை பஞ்சாபகேசன், அன்றைய வழக்கப்படி மகளுக்கு ஏழு வயது ஆனதும் அவரை முத்துமணி என்பவருக்குத் திருமணம் செய்துவைத்தார். இரு குடும்பங்களுக்கும் இடையே பிணக்கு தோன்றவே, கணவர் வீட்டுக்குச் செல்லாமலே இருந்தார் சிறுமி ராஜலட்சுமி. மனம் உடைந்து பஞ்சாபகேசன் இறந்துபோக, ஆதரவின்றி விடப்பட்டனர் தாயும் மகளும்.

வாழ வழி தேடி, திருவாரூரில் இருந்து திருச்சிக்கு நடந்தே பயணப்பட்டனர் இருவரும். ஏழ்மையில் உழன்ற சிறுமி ராஜலட்சுமிக்குக் கடவுள் கொடுத்த கொடை - அவரது குரல்வளம். அருமையாகப் பாடக்கூடிய திறமையும் ஆர்வமும் இருந்ததால், சி.எஸ். சாமண்ணாவின் நாடகக் குழுவின் முதல் நடிகையாக அரிதாரம் பூசிக் கொண்டார், பத்து வயதுச் சிறுமி ராஜலட்சுமி. அடுத்த ஆண்டு இவரை விவாகரத்து செய்தார் கணவர் முத்துமணி. சற்றும் அசரவில்லை இந்தச் சாதனைப் பெண். தொடர்ந்து சாமண்ணாவின் குழுவில் நடித்தார். அதன்பின் பல குழுக்களில் நடிப்பு. பால பார்ட், ஸ்த்ரீபார்ட், கதாநாயகன் எனப் பத்து வருடங்களாக நாடக உலகைக் கலக்கிவந்தார். ரங்கூன், சிங்கப்பூர் என வெளிநாடுகளிலும் தமிழ் நாடகங்களில் மேடையேறினார்.

1929-ம் ஆண்டு ஏ.நாராயணன் தயாரித்த  `கோவலன்’ என்ற சலனப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் ராஜ லட்சுமி. ராஜா சாண்டோ இயக்கிய ராஜேஸ்வரி, உஷா சுந்தரி என அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!