குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பெண்களுக்குத் தரும் அனுகூலங்கள்! - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சட்டம் பெண் கையில்! எழுத்து வடிவம்: யாழ் ஸ்ரீதேவி, ஓவியம் : கோ.ராமமூர்த்தி

திருமண உறவில், பெண்ணின் மீது வார்த்தைகளாகவும் செயல்களாகவும் வன்முறை நிகழ்த்தப்படும்போது, அவர் சட்டத்தை நாட வேண்டியது அவசியம். கணவன் மனைவி என்றில்லை; குடும்ப அமைப்பில் வாழும் ஆண் பெண் யாராக இருந்தாலும் பெற்றோர், உடன்பிறந்தவர்கள் எனத் தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களால் துன்பத் துக்கு உள்ளாக்கப்படுவதும் குடும்ப வன்முறையே. இதைத் தடுக்க உருவாக்கப்பட்டதுதான் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம். என்றாலும், இது அதிகமாகத் தேவைப் படுவது திருமண உறவில் கணவர் மற்றும் புகுந்த  வீட்டினரால் வன்முறைக்கு உள்ளாக்கப்படும் பெண்களுக்கே.

நான்கு சுவர்களுக்குள் நடக்கும் குடும்ப விஷயங் களில், எவற்றையெல்லாம் வன்முறை எனச் சட்டம் அடையாளம் காட்டுகிறது? அதைத் தெரிந்துகொள் வதன் மூலமே, பாதிக்கப் பட்டவர்கள் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் நீதி பெற முடியும்.

குடும்ப அமைப்பில் எவையெல்லாம் வன்முறை?

ஒரு குடும்பத்துக்கு மருமகளாக வந்த பெண்ணை பையனின் பெற்றோர், உடன்பிறந்தவர்கள், இன்னபிற குடும்ப உறவுகள் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் துன்புறுத்துவது வன்முறை. மனரீதியாக என்று சொல்லும்போது, சம்பந்தப்பட்ட பெண்ணைப் பற்றி புறம்பேசுவது, உள்நோக்கத்துடன் அவர் மனதைக் காயப்படுத்தும்படி பேசுவது, வார்த்தைகளால் மன உளைச்சல் தருவது... இவையெல்லாமே வன்முறைதான். உடல்ரீதியாக என்று சொல்லும்போது, முடியைப் பிடித்து இழுப்பது, அடிப்பது, சூடு வைப்பது எனச் சம்பந்தப்பட்ட பெண்ணைத் துன்புறுத்தும் அனைத்துச் செயல்களும் தண்டனைக்குரிய வன்முறையே.

இதுபோன்ற விதவிதமான குடும்ப வன்முறைகளைப் பெண்கள் பலர் சகித்துக் கொண்டு வாழ்கின்றனர். ஆண்கள், தங்கள் இயலாமையை மனைவியிடம் கோபமாக, ரணப்படுத்தும் சொற்களாக, வன்முறையுடன் வெளிப்படுத்தி அவர்களை மனம்நோகச் செய்கின்றனர். மதுப் பழக்கத்துக்கு ஆளான ஆண்கள் மனைவியை அடிப்பதற்கும் உதைப்பதற்கும் காரணமே தேவைப்படுவதில்லை. அவர்களின் அந்த நேர ஆத்திரத்தைத் தீர்த்துக்கொள்ள ஒரு ஜீவன் தேவைப்படுகிறது... அவ்வளவுதான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick