கீர்த்தனாவுக்கு என்ன கொடுத்தேன் தெரியுமா? - நடிகை சீதா

அன்றும் இன்றும்

ளைய மகள் கீர்த்தனாவின் திருமணம் முடிந்த மகிழ்ச்சி, மூத்த மகளுக்கு வரன் தேடும் படலம், நடிப்பு, குடும்பப் பணிகள் எனப் பல ஓட்டங்களுக்கு இடையே, சென்னை சாலிகிராமத்திலுள்ள நடிகை சீதாவின் வீட்டில் தொடங்கியது மகிழ்ச்சியான உரையாடல்.

புதுப்பொண்ணு கீர்த்தனா எப்படி இருக்காங்க?

கடந்த மார்ச் மாதம் கீர்த்தனாவின் கல்யாணம் சிறப்பா முடிஞ்சது. ரொம்ப நாள் கழிச்சு குடும்பத்தில் நடந்த நல்ல விசேஷம் என்பதால, எனக்கு அளவில்லா மகிழ்ச்சி. கீர்த்தனாவுக்கு டிரஸ், ஆக்சஸரீஸ்ல பெரிய ஈடுபாடு கிடையாது. சிம்பிளா இருக்கணும்னு தான் விரும்புவா. எனக்குப் பட்டுப் புடவைகள் ரொம்பப் பிடிக்கும். அவளுக்கு நான் கொடுத்த கல்யாணப் பரிசுகளில், பொண்ணுக்காக தேடித்தேடி வாங்கிய பட்டுப் புடவைகள் ஸ்பெஷல். கல்யாணத்துக்குப் பிறகு ஒருநாள், கிரீன் அண்டு பிங்க் காம்பினேஷன்ல ஒரு பட்டுப் புடவையைக் கட்டிட்டு என் வீட்டுக்கு வந்திருந்தா. அவளை புடவையில், கணவரோடு ஜோடியா  பார்த்தப்போ ரொம்பப் பூரிப்பா இருந்துச்சு. மகளுக்கும் மாப்பிள்ளைக்கும் அசைவம் பிடிக்காது. அவ இங்கே வரும்போதெல்லாம், சைவத்தில் விதவிதமா சமைச்சுப் பரிமாறுவேன். கீர்த்தனா சந்தோஷமா இருக்கா!

‘ஆண் பாவம்’ படத்தில் அறிமுகமான சீதாவுக்கும், இப்போதைய சீதாவுக்குமான வித்தியாசம்?

சினிமா உலகம்னா அப்போ எனக்கு என்னன்னே தெரியாது. ஒரு நிகழ்ச்சியில கலந்துகிட்டப்போ எடுக்கப்பட்ட என் போட்டோவைப் பார்த்த இயக்குநர் பாண்டியராஜன் சார், அப்பாகிட்ட என்னை நடிக்கக் கேட்டிருக்கிறார். ‘ஒரு படத்துல மட்டும் நடி... பிடிக்கலைன்னா, பிறகு நடிக்க வேண்டாம்’னு அப்பா சொல்ல, சம்மதிச்சேன். பத்தாம் வகுப்பு படிச்சப்போ, ‘ஆண் பாவம்’ படத்துல நடிச்சேன். மருதாணி வெச்சுக்கிட்டு, படுத்துக்கிட்டே காலை ஆட்டிக்கிட்டு இருக்கிற மாதிரியான காட்சி. அந்த ஷாட் முடிஞ்சதும், மொத்த டீமும் வேற லொக்கேஷனுக்குப் போயிட்டாங்க. அதுகூட தெரியாம ரொம்ப நேரம் அங்கேயே காலாட்டிக்கிட்டு இருந்தேன். அந்த அளவுக்கு அப்போ அப்பாவியா இருந்தேன். தொடர்ந்து நான்கு தென்னிந்திய மொழிகளிலும் நடிச்சதால, படிப்பைத் தொடர முடியலை. கேட்ட நேரத்துக்கு சாக்லேட், ஐஸ்க்ரீம் கிடைக்கும். வெரைட்டியான காஸ்ட்யூம், தேவையை உடனே பூர்த்திசெய்ய ஆள்கள்னு ஸ்பெஷல் கவனிப்புடன் இருந்தேன். ஆறு வருஷத்துல 80 படங்களுக்கும் மேல ஹீரோயினா நடிச்சேன். நான் சினிமாவுக்கு வந்து 33 வருடங்கள் ஓடிடுச்சு. நிறைய பிரச்னைகளைச் சந்திச்சு, எதிர்கொண்டு, இப்போ முதிர்ச்சியான மனநிலைக்கு வந்திருக்கேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick