லக்கி - ஆலிஸ் செபோல்ட்

எதிர்க்குரல்

ன் உதடுகள் கிழிந்திருந்தன. பின்னாலிருந்து அவன் என்னை இறுக்கிப்பிடித்து என் வாயைப் பொத்தியபோது என் உதடுகளை நானே கடித்துக்கொண்டுவிட்டேன். ‘கத்தினால் கொன்றுவிடுவேன்!’ என்றான் அவன். என்னிடம் சிறு சலனமும் இல்லை. ‘நான் சொல்வது புரிகிறதா? கத்தினால் நீ இறந்துபோவாய்!’ - நான் தலையசைத்தேன். என் கைகள் என்னோடு சேர்த்து ஒட்டிக்கொண்டதைப் போல இருந்தன. அவனுடைய வலதுகரம் என்னைச் சுற்றி வளைத்திருந்தது. இடதுகை என் வாயை அழுத்திப்பிடித்திருந்தது.  பிறகு, அவன் தன் கையை எடுத்தான். சட்டென்று கத்தினேன். விரைவாக அவன் என் வாயை மீண்டும் பொத்தினான். என் கால்களை எட்டி உதைத்தான். கீழே விழுந்தேன். ‘உன்னைக் கொல்வதுதான் சரி.’

1981 மே 8... நியூயார்க். விடியற்காலை நேரம். கல்லூரி வளாகத்திலிருந்து தனது வீட்டை நோக்கி நடந்துகொண்டிருந்தார் 17 வயது ஆலிஸ் செபோல்ட். ஒரு பூங்காவைக் கடந்து அவர் சென்று கொண்டிருந்தபோது இடைமறிக்கப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். முதலில் அவன் ஆலிஸை அடித்திருக்கிறான். தன்னிடம் இருந்த சிறு கத்தியால் அவள் உடலைக் கீறியிருக்கிறான். ‘அவனைப் பிடித்துத் தள்ளினேன். கடித்தேன். ஓடத் தொடங்கினேன். அவனோ, எல்லா பலமும் கொண்ட ஓர் அரக்கனைப் போல ஓடிவந்து என்னுடைய நீண்ட கூந்தலைப் பற்றினான். நான் அலற அலற, தலைமுடியைப் பிடித்து இழுத்து என்னைத் தரையில் மண்டியிட வைத்தான். நான் அவனிடம் மன்றாடத் தொடங்கினேன். நிலத்தில் என் முகத்தைப் புதைத்துத் தரையோடு தரையாக என்னை வைத்து அழுத்தினான். என்மீது ஏறி அமர்ந்துகொண்டான். சபித்தான். கல்லை எடுத்து தலையில் அடித்தான். என் உடலைத் திருப்பிப்போட்டு என் மார்பின்மீது உட்கார்ந் தான். இரு கைகளாலும் என் கழுத்தைப் பிடித்து இறுக்க ஆரம்பித்தான். என் தலைசுற்றியது. மயக்கம் வருவதுபோல இருந்தது. என் உடலை அவனிடம் முழுமையாக ஒப்படைத்தேன்.’

எல்லாம் முடிந்த பிறகு ஆலிஸ் எழுந்துகொண்டார். `நான் இப்போது போக லாமா?' அவன் குழைந்தபடி, `ஓ' என்றான். `எனக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டுப் போயேன்' என்று இளித்தான். நடுக்கம் குறையாமல் நின்றுகொண்டிருந்தேன். அவன் என்னை நெருங்கி என்னுடைய ஜீன்ஸில் கையைவிட்டு நான் வைத்திருந்த எட்டு டாலரை உருவிக்கொண்டான்.  `என் புத்தகங்களை எடுத்துக்கொள்ளட்டுமா?' என்றேன். அவனே புத்தகங்களை எடுத்து என் கையில் வைத்தான். நான் எதற்கு அவனிடம் ஒவ்வொன்றுக்கும் அனுமதி கேட்டுக்கொண்டு நிற்கிறேன்? எதற்காக அவனுடைய உத்தரவு எனக்குத் தேவைப்படுகிறது?  என் உடலை மட்டுமல்ல; என்னையுமேகூட முழுமையாக அவன் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டுவிட்டான் என்று நான் நம்புகிறேனா? பயமா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick