#நானும்தான்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
குறுந்தொடர்ஓவியங்கள்: ஸ்யாம்

#metoo

தினோராவது மாடியின் உச்சியில் நின்றிருந்தாள் நாகபூஷணம். காற்று ஜிவ் ஜிவ் எனச் சுழன்றடித்தது. கட்டியிருந்த சேலை படபடத்தது. கீழே பார்த்தபோது பயம் போய், ஒரு சுவாரஸ்யம் சேர்ந்துகொண்டது. ‘ஒரு நொடியில் எல்லா பாவங்களும் ரத்தக் கூழாகிவிடும். பாவம், சுத்தம், அச்சம், கற்பு எல்லாமும் ரத்தசகதியில் கலந்துவிடும்.’ நாகபூஷணம், ‘குதிச்சுட்டா எல்லாம் சரியாபூடும்’ என மட்டும்தான் நினைத்தாள். கதைக்குத்தான் மேற்படி விவரணை தேவையாக இருக்கிறது.

நேற்று தளம் ஊற்றினார்கள். மேல் பகுதியில் பாத்தி கட்டி நீர் நிரப்பியிருந்தார்கள்.

சூரியன் கிடைமட்டத்துக்கும் கீழே இறங்கிவிட்டதால் நீர் இளம்சூடாக மாறியிருந்தது. மாடியில் யாருமில்லை. எல்லோரும் கீழே இருக்கிறார்கள். இன்னும் கொஞ்ச நேரத்தில் எல்லோரும் கிளம்பிவிடுவார்கள். அப்போது குதித்தால் யாருக்கும் தெரியாது. செக்யூரிட்டிகள் இருப்பார்கள். அவர்கள் பார்த்துவிட்டுப் போலீஸுக்கும் வீட்டுக்கும் தகவல் சொல்வார்கள். அப்புறம் என்ன நடக்கும்? நாகபூஷணத்தின் அப்பா போதையில் இருந்தால் காலையில்தான் விஷயம் எட்டும்.
சிவகாமி, அழுவாள். ‘நல்லாத்தானே பேசிக்குனு இருந்தா. இப்பிடி பண்ணிபுட்டாளா பாவி’ என்பாள். நீரின் சூடு குறைவதை உணர முடிந்தது. காலை நீரில் அலையவிட்டு, நகத்தில் ஒட்டியிருந்த சிமென்ட் காரையைத் தேய்த்துக் கழுவினாள். ஒரு சினிமாவில் கடலில் குதித்து சாக முடிவெடுத்த பெண் ஒருத்தி, மேக்அப் போட்டுக்கொள்வது நினைவுக்கு வந்தது. ‘அழுக்கா இருந்தா இன்னா இப்போ?’ என உள்ளே ஒரு குரல் ஒலித்தது. இன்னும் ஓரடி முன்னே வைத்தாள். கட்டடத்தின் விளிம்புக்கு இன்னும் சில அடிகள்தாம் இருந்தன. அந்தக் கட்டடம் ஒவ்வொரு மாடியாக வளர்ந்தபோது... செங்கல்லையும் சிமென்ட் கலவையையும் தூக்கிச் சுமந்தபோது அது தனக்காகத்தான் வளர்கிறது என நினைக்கவே இல்லை. எல்லாக் கட்டடமும் கட்டி முடித்தபின் இன்னொருவருக்குச் சொந்தமாகிவிடும். அங்கிருந்து இன்னொரு கட்டடத்துக்குக் கிளம்புவாள். இது..? இவளுக்கான கடைசி கட்டடம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick