இந்தியாவின் முதல் பெண் மேயர்... பத்மபூஷண் தாரா செரியன்

சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர்; இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்!முதல் பெண்கள்ஹம்சத்வனி ஓவியம் : கார்த்திகேயன் மேடி

காலருகில் வரிசையாக ஐந்து லாசா ஆப்சோ ரக நாய்கள். ஹால் முழுக்க பூனைகளும் விருதுகளும் நினைவுப் பரிசுகளும். சோபாவில் கம்பீரமாக அமர்ந்திருப்பவர் பேசத் தொடங்குகிறார்... “நான் ஒரு பிச்சைக்
காரன் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?” - அதிர்ச்சியைக் கடக்கும் முன்னர் அவரே தொடர்கிறார்...

“செங்கல்பட்டு பஸ் ஸ்டாண்டில் லாட்டரி டிக்கெட் விற்றேன். ஊனமுற்ற காரணத்தால், தவழ்ந்துதான் செல்வேன். செக்யூரிட்டி வேலை செய்த சிலர் `ஏர்போர்ட்டில்  பிச்சை எடுக்கலாமே' என்று சொல்ல, உடனே அங்கே ஆஜர்.

ஒன்பது வயது முதல் பிச்சையே வாழ்க்கை என்று இருந்த எனக்கு வெளிச்சம்காட்டியவர் இந்த அம்மாதான்” என்று ஒரு புகைப்படத்தைக் காட்டுகிறார். அதில், அரக்கு வண்ண பட்டுப் புடவையில் ஒரு வெண்ணிற தேவதை இருக்கிறார். “தாராம்மா பார்க்க அத்தனை அழகு. அதைவிட அவர் குரல் அழகு. சன்னமான, மென்மையான குரல். எல்லாவற்றையும்விட அவரைப் பேரழகியாக்கியது அவரது குணம்... எல்லோருக்கும் உதவும் பண்பு” என்று கூறுகிறார். ஏர்போர்ட்டில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த ஆன்டனி, நிர்மலா கோகர்ன் என்ற சேவை மனப்பான்மை கொண்ட பெண்ணின் கண்ணில்பட, அங்கிருந்து `கில்டு ஆஃப் சர்வீஸ்' விடுதிக்கு இடம் மாறுகிறார். அங்குதான் தாராவைச் சந்திக்கிறார். சமூக சேவையில் ஆர்வம் கொண்ட தாரா, மாற்றுத்திறனாளியான அந்தச் சிறுவன் மீது தனிப் பாசம் கொள்கிறார். மூன்றே ஆண்டுகளில், குடியரசுத் தலைவரிடமிருந்து `சிறந்த குடிமகன்’ என்ற விருது பெறுகிறார் ஆன்டனி. சிறுதொழில் தொடங்க எண்ணிய ஆன்டனிக்கு தாரா பெரும் ஊக்கம் தர, மளமளவெனத் தன் வியாபாரத் தைப் பெருக்கத் தொடங்கினார் ஆன்டனி.

`மனதில் உறுதி வேண்டும்' திரைப்படத்தில் வரும் பிச்சைக்காரன் கதாபாத்திரத்தையும் அவருக்கு உதவும் கதாநாயகியையும் மறக்கவே முடியாது. அப்படித்தான் ஆன்டனி- தாராவின் நட்பும். முன்னேறும் உறுதியும் கடின உழைப்பும் கைகொடுக்க, சொந்தத் தொழிற்சாலை தொடங்கும் நிலைக்கு உயர்ந்தார் ஆன்டனி. “என்னைவிட என் வளர்ச்சியில் தாராம்மாவுக்கு அத்தனை பெருமை. நாய்கள்மீது அவருக்குக் கொள்ளை பிரியம். பணியாளர்களிடமும் அத்தனை அன்பாக இருப்பார்” என்று கூறுகிறார் தொழிலதிபர் ஆன்டனி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick