ஒரு சமூகத்துக்குச் சிகிச்சை அளிப்பது எப்படி? - எலிஸபெத் பிளாக்வெல்

எதிர்க்குரல்

ந்த விண்ணப்பத்தைக் கண்டதும், ஜெனிவா மருத்துவக் கல்லூரி நிர்வாகம் அதைக் கிழித்து எறிந்துவிடத்தான் முதலில் விரும்பியது. ஆனால், செய்யவில்லை. மாணவர்களுக்கும் கல்லூரி நிர்வாகத்துக்கும் இடையில் மிகப் பெரிய இடைவெளி உருவாகியிருந்த நேரம் அது. இந்தச் சிக்கலைத் தீர்க்க, ஏன் இந்த விண்ணப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளக் கூடாது? உடனடியாக ஓர் அறிவிப்பை வெளியிட்டார்கள்.

`மாணவர்களே, நம் கல்லூரியில் இணைந்து படிப்பதற்காக வந்திருக்கும் ஒரு விண்ணப்பம் இது. இவரை நாம் சேர்த்துக்கொள்ளலாமா என்பதை முடிவுசெய்ய வேண்டியவர்கள் நீங்கள். உங்கள் முடிவுக்கு நிர்வாகம் கட்டுப் படும் என்று உறுதியளிக்கிறோம்.'

அந்த விண்ணப்பத்தைப் பார்த்த மாணவர்கள் சிரித்தார்கள். இதை நாம் நிராகரிப்போம் என்று நிர்வாகத்துக்கு நன்கு தெரியும். நாம் ஏன் நிர்வாகத்தை அவமானப்படுத்த இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ளக் கூடாது? `இந்த விண்ணப்பத்தை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இவரை நாம் அனுமதிக்க வேண்டும்' என்று சிபாரிசு செய்து அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தார்கள்.  இது நடந்தது 1847-ம் ஆண்டு.

எலிஸபெத் பிளாக்வெல் நெஞ்சம் நிறைய கனவுகளுடன் உற்சாகமாக வகுப்பறைக்குள் நுழைந்தபோது, மாணவர்கள் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர். விளையாட்டு வினையாகி விட்டதா? நிஜமாகவே இந்தப் பெண் நம்முடன் இணைந்து படிப்பதற்காகத்தான் வந்திருக்கிறாரா? தயக்கத்துடன் நெருங்கிச் சென்று கேட்டார்கள். `ஆமாம்' என்று மகிழ்ச்சியுடன் தலையசைத்தார் எலிஸபெத். ``சிறியது, பெரியது என்று வேறுபாடில்லாமல் எல்லா மருத்துவக் கல்லூரிகளுக்கும் விண்ணப்பம் அனுப்பி அனுப்பி ஓய்ந்திருந்த நேரத்தில், இந்தக் கல்லூரி மட்டும் பெருந்தன்மையுடன் என்னை ஏற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிர்வாகத்துக்கு நான் மிகவும் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன். உங்களோடு இணைந்து பயில்வது எனக்கொரு நல்ல அனுபவமாக இருக்கும் என்று நம்புகிறேன்'' என்று கள்ளம்கபடமில்லாமல் கைநீட்டிய எலிஸபெத்தை என்ன செய்வ தென்று அவர்களுக்குத் தெரியவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick