நமக்குள்ளே...

ந்த வீடியோ பதிவில் அசத்தலாகப் பேசியிருக்கும் ஒரு குழந்தையைப் பற்றி தமிழகத்தில் பேசாதவர்கள் மிகமிகக் குறைவு. அனைவரும் ஆவலுடன் பகிர்ந்து, ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும் அந்த வைரல் வீடியோவில் அப்படி என்னதான் சொல்கிறாள் அந்தக் குழந்தை?

‘சேட்டை பண்ணினா, அடிக்கக் கூடாது; திட்டாம, அடிக்காம, குணமா வாய்ல சொல்லணும்’’ - இவ்வளவுதான். இந்த ஒரு வரி, இன்று உலகம் சுற்றுகிறது.

குழந்தைகளை அடிக்கக் கூடாது என்று அரசாங்கம் சட்டமே இயற்றியிருந்தாலும், கடைப்பிடிக்கிறோமா? வீடுகளில் குழந்தைகளை மிரட்டி ஒடுக்கும் பெற்றோர்தான் அதிகம். பெற்றோர் பலர், பள்ளிகளுக்கே சென்று, ‘ரொம்ப சேட்டைங்க, எங்களுக்கு அடங்கல. அடிச்சாவது படிக்க வைங்க’ என்று சொல்வதைப் பார்க்கிறோம்.

ஆசிரியர் அடித்ததால் பார்வை பறிபோன குழந்தைகள், பெற்றோரின் மிதமிஞ்சிய கண்டிப்பால் மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்ட பிள்ளைகள், பெற்றோர் கனவை நிறைவேற்ற முடியாத விரக்தியில் உயிரைவிட்ட பிள்ளைகள், பெற்றோர்  ஆத்திரத்துடன் அடித்ததால், கீழே தள்ளிவிட்டதால் தலைமோதி இறந்த குழந்தைகள் என ‘கண்டிப்பு’, அக்கறை என்பது போன்ற கற்பிதங்களுடன் நடக்கும் கொடுமைகள்தாம் எத்தனை? நாம் பெற்ற குழந்தையாகவே இருந்தாலும், அந்தப் பிஞ்சின் உடல்மீது நமக்கு உரிமை தந்தது யார் என்று நினைத்துப் பார்க்கிறோமா?

கடுமையாகக் கண்டிப்பதாலும் அடிப்பதாலும் குழந்தைகள் திருந்துவதில்லை என்பது எப்போதோ நிரூபிக்கப்பட்டுவிட்டது. குழந்தைக்கு விருப்பமான ஏதோ ஒன்றைக் கொடுப்பது அல்லது செயல்படுத்துவதன் மூலமே அவர்களைச் சரியான பாதையில் செலுத்த முடியும் என்பது பல ஆய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட உண்மை. ஆனால், இந்தியப் பெற்றோராகிய நம்மில் பெரும்பாலானவர்கள், ‘ஃபனிஷ்மென்ட் சிஸ்டம்' எனப்படும் தண்டனை முறையைத்தானே தொடர்கிறோம் இன்னமும். ‘நம் பெற்றோர் அப்படித்தானே நம்மை வளர்த்தார்கள்? நாம் நன்றாகத்தானே இருக்கிறோம்!’ என்று நினைத்தால் அது மிகப்பெரிய பிழை. நம் குழந்தைப்பருவத்தை அசைபோட்டுப் பார்த்தால், வாங்கிய பாராட்டுகளைவிட, அடிகளே அதிகமாக... அழுத்தமாகக் கண்முன் நிற்கும்.

நாம் வளர்ந்த சூழல் வேறு. இன்றைய சூழல் வேறு. படிப்பு, விளையாட்டு, கலை என்று அத்தனை திசைகளிலும் அளவுக்கதிகமான போட்டிகளும், அதனால் எழும் அழுத்தங்களையும் சந்திக்கிறார்கள் இன்றைய பிள்ளைகள் என்பதை மறந்துவிடக் கூடாது.

இனி... திட்டாம, அடிக்காம குணமா வாய்ல சொல்லுவோமா தோழிகளே?

உரிமையுடன்,

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick