மத்திய சமூக நல வாரியத்தின் முதல் தலைவர்; தேசிய மகளிர் கல்வி கவுன்சிலின் முதல் தலைவர் - துர்காபாய் தேஷ்முக்

முதல் பெண்கள்

1921-ம் ஆண்டு... காக்கிநாடாவில் காந்தி உரையாற்றுவதாக ஏற்பாடு. விதவைகள் மற்றும் வெளியுலகத் தொடர்பு அதிகம் இல்லாத பெண்களுக்குத் தனியாக உரை நிகழ்த்த வேண்டும் என்று விண்ணப்பித்தாள், 12 வயதே நிரம்பிய சிறுமி ஒருத்தி. விடுதலைப் போராட்ட செலவுகளுக்காக 5,000 ரூபாய் பணமுடிப்பு தந்தால் காந்தி பேசுவார் என்று சொல்லப்பட, வசூல் வேட்டையில் இறங்கிவிட்டாள். குறித்த நாளும் வந்தது. காந்தியும் வந்தார். நூற்றுக்கணக்கான பெண்கள் முன் எழுச்சிமிகு உரை நிகழ்த்தினார். அந்தப் பேச்சை தெலுங்கில் மொழிபெயர்த்து மேடையில் பேசியது... அதே சிறுமிதான்! காந்தியின் உரையைக் கேட்டு, பெண்கள் தங்கள் கை வளையல்களையும், கழுத்து நகைகளையும் கழற்றிக் கொடுத்தனர். அன்று முதல் ஆந்திராவில் காந்தி எங்கு உரை நிகழ்த்தினாலும் அந்தச் சிறுமிதான் மொழிபெயர்ப்பு செய்தாள்.

அன்றைய தினம் வீடு திரும்பியவுடன் அந்தச் சிறுமி தன் அத்தனை `பார்ட்டி ஃப்ராக்’ உடைகளையும் தீயிட்டுக் கொளுத்தினாள். இனி தான் பள்ளிக்குச் செல்லப்போவதில்லை என்று பெற்றோரிடம் அறிவித்தாள். சுதேசி இயக்கத்துக்குத் தன் முழு ஆதரவையும் தரப்போவதாக அந்த 12 வயது சிறுமி கூறவும் தெருவே அதிசயித்தது.  அந்த வயதில் பள்ளி ஒன்றைத் தோற்றுவித்து அதன் தலைமை ஆசிரியராக 21 வயது வரை வழிநடத்தியதும் சிறுமி துர்காபாயின் பெரும் சாதனை. பின்னாளில் கிட்டத்தட்ட நூறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் பள்ளிகள் தொடங்க துர்காபாய்க்கு உதவியது அவரின் இந்தத் தன்னம்பிக்கையும் அசாத்திய துணிச்சலும்தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick