நமக்குள்ளே...

‘உலக நாடுகளில் அதிகப் பெண் விமானிகளைக் கொண்ட ஆச்சர்யமான நாடு என்ற தலைப்பில் லண்டனின் ‘த டெலிகிராஃப்’ நாளிதழ் வியந்திருக்கிறது. இங்கிலாந்தில் பெண் விமானிகளின் சதவிகிதம் 4.77 மட்டுமே. அமெரிக்காவிலோ 6.6 சதவிகிதம். அப்படியென்றால் உலகமே பார்த்து அதிசயிக்கும் அந்த நாடு?

இந்தியா!

ஆம், நம்நாட்டில் பறந்துகொண்டிருக்கும் கமர்ஷியல் பைலட்களில், 12.2 சதவிகிதத்தினர் (எண்ணிக்கையில் 1,092) பெண்கள்!

நம் பாட்டிகளின் காலத்தில் பெண்கள் அதிகம் படித்ததில்லை. தப்பித்தவறி படித்தவர்களும் ஹோம் சயின்ஸ், ஆசிரியர் பயிற்சி என்று குறுகிய வட்டத்துக்குள் நின்றார்கள். நம் அம்மாக்களின் காலத்தில்... பி.ஏ அல்லது பி.எஸ்ஸி என ஏதோ ஒரு பட்டப்படிப்புடன் நிறுத்திக்கொண்டார்கள். நம்முடைய காலத்தில் பொறியியல், மருத்துவம் என்று சில படிகள் உயர ஆரம்பித்தனர். அடுத்த தலைமுறையினரோ... பொறியியல், மருத்துவம் என்பதையெல்லாம் தாண்டி நிறையவே யோசிக்கிறார்கள். அதற்கேற்ப வாய்ப்புகளும் கொட்டிக் கிடக்கின்றன.

எந்தப் படிப்பை, எங்கு படித்தால் வேலை கிடைக்கும் என்பது ஒருபுறமிருக்க, எந்தப் பணி மனதுக்கு நிறைவாக இருக்கும் என்பதையும் முக்கியமாக அறிந்து வைத்திருக்கிறார்கள்.

விமானி, பட்டயக்கணக்காளர், கிராஃபிக்ஸ் டிசைனர், ஃபேஷன் டிசைனர், கட்டட வடிவமைப்பு, டிஜிட்டல் ஸ்ட்ராட்டெஜிஸ்ட், ஃபிட்னஸ் கன்சல்டன்ட் என பற்பல துறைகளிலும் பெண்கள் கலக்கி வருகிறார்கள். வெளிநாட்டுப் பெண்களைப் பார்த்து வியந்த காலமெல்லாம் மலையேறி, நம் பெண்களைப் பார்த்து வெளிநாட்டினர் வியக்கும் காலம் கூடி நிற்கிறது.

‘இப்படித்தான் இருக்க வேண்டும்... இதைத்தான் படிக்க வேண்டும்' என்று பெண் குழந்தைகளுக்குக் கட்டுப்பாடு விதிக்கும் பெற்றோர், தங்கள் எண்ணத்தை மாற்றவேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது. பெண்களின் சுயசிந்தனைக்கான களத்தை மேலும் அகலமாக்குவோம்; பெண்கள் பணியாற்றுவதற்கான களங்களை மேலும் விரிவாக்குவோம்; அவர்களது தேர்வின் மீது மேலும் நம்பிக்கை வைப்போம்.

பறத்தல்... ஒவ்வொரு மனிதனுக்கும் சுகம். பெண்ணுக்கோ, மாபெரும் சுதந்திரம். சிறகுகளை விரிக்கும் நம் பெண்களுக்கு வானம் இன்னும்... இன்னும்... இன்னும்... வசப்படட்டும்!

உரிமையுடன்,

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்