நமக்குள்ளே... | Editorial page - Chutti Vikatan | அவள் விகடன்

நமக்குள்ளே...

மூக வலைதளங்களான ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் #MeToo என்ற ஹேஷ்டேக்கில், பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்கள்/பாலியல் ரீதியிலான தாக்குதல்களுக்கு ஆளானதை, துணிச்சலாகப் பதிவிட்டு வருகிறார்கள் பெண்கள்.

2017-ம் ஆண்டு இதே அக்டோபர் மாதம், அமெரிக்காவில் ஹார்வி வெய்ன்ஸ்டீன் என்ற திரைப்படத் தயாரிப்பாளரின் பாலியல் அத்துமீறல்களுக்கு எதிராக, பாதிக்கப்பட்ட பெண்கள் இந்த ஹேஷ்டேக்கை அதிரவிட்டதுதான் ஆரம்பம்.

இப்போது, பல்வேறு நாடுகளிலும் இதைக் கையில் எடுத்துள்ளனர் பெண்கள். இந்தியாவைப் பொறுத்தவரை அண்மையில்தான் பெரிய அளவில் வெடிக்க ஆரம்பித்துள்ளது. இந்தி நடிகரான நானா படேகர், பத்தாண்டுகளுக்கு முன் தன்னைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக பாலிவுட் நடிகையான தனு தத்தா சர்ச்சையைக் கிளப்பினார். இதைத் தொடர்ந்து, நடிகர்கள், இயக்குநர்கள், கவிஞர்கள், பாடகர்கள், திரையிசை நட்சத்திரங்கள், மீடியா துறையினர், ஸ்டாண்ட்-அப் காமெடியன்கள், விளம்பரக் கம்பெனிகளின் உயரதிகாரிகள், விளையாட்டுத்துறை வீரர்கள், மத்திய இணைஅமைச்சர் என்று பலர்மீதும் புகார்கள் பறக்கின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை, கவிஞர் வைரமுத்துமீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்து, இதைத் தொடங்கிவைத்துள்ளார் பாடகி சின்மயி. கூடவே, பல்வேறு நபர்களின் பெயர்களையும் வெளியிட்டு வருகிறார். ஆனால், ‘காலம் பதிலளிக்கும்' என்று ட்விட்டரில் தன் தரப்பைச் சொல்லி முடித்துக்கொண்டார் வைரமுத்து.

இப்படிப்பட்ட புகார்களுக்குப் பலர் ஆதரவு தெரிவிக்கும் அதேநேரம், சிலர் எதிர்க்கவும் செய்கிறார்கள். இரண்டு தரப்புமே அதற்கான காரண காரியங்களையெல்லாம் கேள்விகளாக எழுப்பி விவாதித்துக்கொண்டுள்ளனர்.

என்ன நடக்கிறது என்று அறியும் பக்குவம்கூட இல்லாத இளம்வயதிலேயே இத்தகைய கொடூரச் சம்பவங்களில் சிக்கும் பெண்கள், இதைப்பற்றியெல்லாம் அதிகம் வெளியே சொல்வதில்லை. மீறிச்சொன்னாலும், அவர்களை ‘கேரக்டர் அஸாசினேஷன்’ செய்வது அல்லது ‘மனநலம் பாதிக்கப்பட்டவர்’ என்று முத்திரை குத்துவதெல்லாம் கடந்த காலங்களில் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால், இப்போது இதையெல்லாம் மீறி வெளியில் பேச ஆரம்பித்திருப்பதே... பெண்களின் தைரியத்தை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது.

‘தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நிவாரணம் பெறுவதற்காகச் சமூக ஊடகங்களைப் பெண்கள் நாடுவது, சட்டத்தின் மீது அவர்களுக்கு நம்பிக்கை போய்விட்டதையே காட்டுகிறது’ என்று கூறும் மூத்த பத்திரிகையாளர் பர்கா தத், கடந்த பல ஆண்டுகளாக இழுத்துக்கொண்டிருக்கும் மூத்த பத்திரிகையாளர் தருண் தேஜ்பால் மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கைச் சுட்டிக்காட்டுகிறார். ஆம், இதிலிருக்கும் உண்மையை யாரும் மறுக்க முடியாது.

சரி, என்ன செய்யலாம் நாம்? குழந்தைகளுக்கும் சக பெண்களுக்கும் காது கொடுப்போம்; அவர்களின் வலிகளை உணர முயல்வோம்; பாலியல் சீண்டல்களை அன்றாட நிகழ்வாகக் கடக்காமல் எதிர்த்து நிற்கும் துணிச்சலை வளர்த்தெடுப்போம்!

உடைத்துப் பேசுவோம்... ஒன்றாகப் பயணிப்போம்!

உரிமையுடன்,

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick